மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் சந்திரா நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள துளசி நகரில் உள்ள ஸ்பா ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, தன்னுடைய பிறப்புறுப்பில் (Genital Area) உள்ள முடியை அகற்றுவதற்காக 4,500 ரூபாய் மதிப்புள்ள பிரேசிலியன் வாக்ஸிங்கை (bikini waxing) தேர்வு செய்திருக்கிறார்.

வாக்ஸிங் செய்கையில், வாக்ஸ் அதிக சூடாக இருப்பதாகவும், வாக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் எரிவதாகவும் தெரிவித்துள்ளார். `இது மிகவும் சாதாரணம் தான், எரிச்சலைக் குறித்து அச்சப்பட வேண்டாம். பிறப்புறுப்பு பகுதி மென்மையானது என்பதால், அதற்கு அதிக அக்கறை எடுத்தே செய்வோம்’ என ஸ்பா உரிமையாளர் நம்பிக்கை அளித்திருக்கிறார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக வாக்ஸை அவரது சருமத்தில் இருந்து அகற்றும்போது, சருமம் உரிந்து எரிச்சல் அதிகமாகி காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 2021 நவம்பர் மாதத்தில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஸ்பா உரிமையாளர் மீது, பெண் புகார் அளித்துள்ளார்.
மிகவும் மோசமான சேவையை வழங்கியதாக 2022 ஜனவரி மாதத்தில் ஸ்பா உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்பா உரிமையாளர் எதையும் பேச மறுத்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி, சம்பவத்தின் உண்மைத்தன்மையை அறிந்த நீதிமன்றம், அப்பெண் சூடாக இருக்கிறது, எரிகிறது என்று கூறும்போதே சிந்தித்து இருக்கவேண்டும். இதனால் இவருக்குக் காயங்கள் ஏற்பட்டு இருப்பது உறுதியாகிறது.
எனவே அப்பெண்ணுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 30,000 ரூபாயும், உளவியல் பிரச்னையை ஏற்படுத்தியதற்காக 20,000 ரூபாயும், மருத்துவச் செலவுகளுக்காக 20,000 ரூபாயும் என மொத்தம் 70,000 ரூபாயை 30 நாள்களுக்குள் அவருக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.