கம்போடியாவில் 1975 முதல் 1979 வரையிலான கெமர் ரூஜ் ஆட்சியின் போது, ராணுவத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்களின் பிறந்த தேதிகளின் பதிவுகளை மாற்றிக்கொண்டனர். அதனால் 50 வயதுக்கு மேற்பட்ட கம்போடியர்கள் இப்போதும் இரண்டு பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், கம்போடிய பிரதமர் ஹுன் சென் தனது இரண்டு பிறந்த தேதிகளில் ஒன்றை மட்டும் அதாவது சட்டப்பூர்வ பிறந்த தேதியாக ஏப்ரல் 4, 1951-லிருந்து ஆகஸ்ட் 5, 1952-ஆக மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “எனது சகோதரருக்கு இரண்டு பிறந்தநாள்கள் இருப்பது அவரின் மறைவுடன் தொடர்புடையது என்று நம்புகிறேன், ஏனெனில் ஒரு தேதி(சீன காலண்டர் படி) அவரை பசுவின் ஆண்டிற்குப் பதிலாக புலி ஆண்டின் கீழ் வைத்தது. ஆனால் அவரின் உண்மையான ராசி பசு அடையாளமாகும்.
சீன ராசி புறக்கணிக்கப்படக்கூடாது. அதனால் நட்சத்திரங்களுடன் இணைத்துக்கொள்ளவும், துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் சட்டப்பூர்வமாக எனது உண்மையான பிறந்த தேதியை மாற்ற முடிவு செய்தேன். நான் ஏற்கெனவே நீதி அமைச்சர் கோயுட் ரித்துடன் விவாதித்தேன், எனது உண்மையான பிறந்த தேதியைப் பயன்படுத்த விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானது. அதனால் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று திரும்பினார். ஆனால் அதன் பின் அவரது மூத்த சகோதரர் கடந்த மே-5 -ம் தேதி காலமானார். அவரின் இறப்புக்கு பின்பே கம்போடிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.