பிரையாப்பஸ்… விறைத்த பாலுறுப்பு… காரணம் தெரியுமா? காமத்துக்கு மரியாதை |S4 – 101

Share

காமத்துக்கு மரியாதை முதல் 3 சீசன்கள் (100 அத்தியாயம்), பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது அவர்களுடைய பின்னூட்டங்களின் மூலம் தெரிந்த காரணத்தால், இதோ காமத்துக்கு மரியாதை சீசன் – 4 ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த சீசனில் ஆண், பெண் பாலுறுப்பு தொடர்பான பிரச்னைகள், காதல், காமம் மற்றும் தாம்பத்திய உறவு சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளுடன், நிபுணர்கள் சந்தித்த case history-களின் அடிப்படையிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவிருக்கிறோம்.

Sexologist Kamaraj

இந்த சீசனின் முதல் அத்தியாயத்தில், செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், ஆண்களின் பாலுறுப்பில் ஏற்படுகிற பிரையாப்பிசம் (Priapism) என்றால் என்ன; அந்தப் பிரச்னை என்னென்ன காரணங்களால் வருகிறது; தீர்வு என்ன என்பன பற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரி மூலம் விளக்கவிருக்கிறார்.

“அந்த ஆண்பிள்ளைக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும். தமிழ்நாட்டின் தென்கோடி பகுதியிலிருந்து, அந்தச் சிறுவனின் குடும்பத்தார் என்னைச் சந்திக்க சென்னை வந்திருந்தார்கள். சிறுவனுடைய ஆணுறுப்பு சில நாள்களாக விறைத்த நிலையிலேயே இருப்பதுதான் பிரச்னை.

இதை மருத்துவர்கள் நாங்கள், ‘பிரையாப்பிசம்’ என்போம். Priapos அல்லது Priapus என்பவர், ஒரு கிரேக்க கடவுள். இவரை இனப்பெருக்கத்துக்கான கடவுளாக அந்நாட்டு மக்கள் வழிபடுகிறார்கள். அவருடைய பாலுறுப்பானது மிக நீண்டு, எப்போதும் விறைத்த நிலையிலேயே இருக்கும்.

மாதிரிப்படம்

அதனால்தான், ஆணுறுப்பு எப்போதும் விறைத்த நிலையில் இருக்கும் பிரச்னைக்கு ‘பிரையாப்பிசம்’ என்ற பெயர் வந்தது. இப்போது சிறுவனுடைய பிரச்னைக்கு வருகிறேன். அவர்களுடைய ஊரிலேயே சில மருத்துவரை சந்திருக்கிறார்கள். அதிலொரு மருத்துவர், சிறுவனுடைய ஆணுறுப்பில் ஓர் ஊசி மருந்தைச் செலுத்தியிருக்கிறார்.

அதன் பிறகு சில மணி நேரம் விறைப்புத்தன்மை குறைந்திருக்கிறது. பிரச்னை சரியாகி விட்டது என்று சிறுவனின் குடும்பத்தார் நிம்மதி பெருமூச்சு விட்ட கொஞ்ச நேரத்தில், மறுபடியும் சிறுவனுடைய உறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. பயந்துபோன அவர்கள், என்னைச் சந்தித்தனர்.

சிறுவனுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் இருக்குமோ என்று விசாரித்துப் பார்த்தேன். அப்போதுதான் டீன் ஏஜில் காலடி வைத்திருக்கிறான் என்பதால், இதுபற்றி அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. அடுத்து, ஆபாசப்படங்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா என்று விசாரித்தேன். அதுவும் இல்லை.

வளர்ந்த ஆண்களுடன் உறவு, வயாகரா மாத்திரை என்று அடுத்தடுத்து விசாரணையைத் தொடர்ந்தேன். இப்படி எதுவுமே அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் நடக்கவில்லை. வெறிநாய் கடித்தாலும் இந்தப் பிரச்னை வரும். அப்படியும் எதுவும் நடக்கவில்லை.

Sex Education

இறுதியாக, அவனுடைய ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை பரிசோதனை செய்து பார்த்ததில், அவனுக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதனாலும், ஆணுறுப்பானது தொடர்ச்சியாக விறைப்புத்தன்மையுடனேயே இருக்கும். உடனடியாக அந்தச் சிறுவனை அதற்குரிய மருத்துவரைச் சந்திக்க பரிந்துரைத்தேன்.

அதாவது, நாம் ஒரு பிரச்னையை பாலியல் தொடர்பானது என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அது முற்றிலும் வேறொரு பிரச்னையாகவும் இருக்கலாம் என்பது இந்த கேஸ் ஹிஸ்டரி நமக்கு சொல்லும் நீதி” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com