- சரோஜ் சிங்
- பிபிசி செய்தியாளர்

பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற தமது பொது அடையாளத்தை அகற்றி விட்டு தலைவராகும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் பிரசாந்த் கிஷோர், வலுவான காங்கிரஸ் தேச நலனுக்கு அவசியம் என்று கூறியிருந்தார். எனினும், காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பதில், அவரது கருத்து பரவலாக வெளிப்படுத்தப்படும் கருத்துடன் மாறுபடுகிறது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியோ அவரது சகோதரி பிரியங்கா காந்தியோ வர வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோரின் முதல் தேர்வு அல்ல.
பிபிசி உடனான சிறப்புக் கலந்துரையாடலின்போது பிரசாந்த் கிஷோர், “சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதே எனது முதலாவது தேர்வு,” என்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்துக்கு காண்பித்த காணொளி காட்சி விளக்கத்தின்போது பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாக ஊகங்கள் நிலவின. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் தேர்தல் பொறுப்பை கவனித்தார்.
ஆனால் பிபிசியுடனான உரையாடலின்போது அந்த ஊகங்கள் அனைத்தையும் நிராகரித்தார் பிரசாந்த் கிஷோர்.
இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், காங்கிரஸில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தே காங்கிரஸ் மேலிடத்திடம் ஆலோசனை நடத்தியதாகவும் தலைமை மாற்றம் குறித்து அப்போது விரிவாக விவாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
“தனிப்பட்ட முறையில் பேசிய விஷயங்களைப் பற்றி நான் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன். பொதுவில் உள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நிலையான தலைமை பற்றி என் மனதில் இருந்த விஷயங்களை நான் அவரிடம் (சோனியா காந்தி) பேசினேன். காங்கிரஸ் கமிட்டியில் இருந்த எல்லா தலைவர்களும் எனது செய்முறை விளக்கத்தை பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிடும் நபர் (பிரியங்கா காந்தி) காங்கிரஸின் தலைவராக வேண்டும் என்றெல்லாம் நான் பேசியதாக வெளிவரும் தகவல் முற்றிலும் தவறானது. நான் வலியுறுத்திக் கூறிய ஒரு விஷயம், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவராக இருக்கக் கூடாது என்பதுதான். இப்போது சோனியா அத்தகைய இரட்டைப் பொறுப்பையே வகிக்கிறார். நான் அந்த இரண்டு பொறுப்புக்கும் தனித்தனி நபர் இருக்க வேண்டும் என்கிறேன்,” என்றார் பிரசாந்த் கிஷோர்.
பட மூலாதாரம், Getty Images
வலுவான காங்கிரஸ் நாட்டுக்கு முக்கியம்
பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நடந்தது கட்சி வளர்ப்புப் பேச்சுவார்த்தை இல்லை. ஆனால் காங்கிரஸ் வலுவாக இருப்பது நாட்டின் நலனுக்கு அவசியம் என்பது பிராந்த்தின் வாதம்.
“பாரதிய ஜனதா கட்சியை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் கூட, வலுவான காங்கிரஸே நாட்டின் நலனுக்கு உகந்தது என கூறுவார்கள்,” என்கிறார் பிரசாந்த் கிஷோர்.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வரைபடம் தொடர்ந்து சரிவடைந்து காணப்படுகிறது. 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் அக்கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. மாநிலங்களவைத் தேர்தலில் கூட அக்கட்சியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பஞ்சாப் போன்ற முக்கியமான மாநிலமும் காங்கிரஸின் கையிலிருந்து நழுவியது.
காங்கிரஸுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, வரும் தேர்தலில் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காக கட்சி அவரை நோக்கி இருப்பதாக நம்பப்பட்டது.
ஆனால், பிரசாந்த் கிஷோர் தாமாகவே காங்கிரஸுக்கு விளக்கம் தரச் சென்றாரா அல்லது காங்கிரஸ் மேலிடத்தால் அவர் அழைக்கப்பட்டாரா போன்ற கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் விரிவாக பதில் அளித்தார்.
“காங்கிரஸ் தலைமை என்னை நோக்கி வரும் அளவுக்கு எனது அந்தஸ்தும், தகுதி பெரிதாக இல்லை. நான் பேச சோனியா காந்தி வாய்ப்பளித்தார், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒப்புக்கொண்ட விஷயங்களை அவர்கள் பின்பற்றினால், அதனால் காங்கிரசுக்கே பலன் கிடைக்கும், ஜனநாயகம், நாட்டுக்குப் பலன் கிடைக்கும்.”
காங்கிரஸிடம் அளித்த விளக்கக்காட்சி குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், “எனக்கு ஒரே ஒரு நிபந்தனை இருந்தது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என பாருங்கள். நான் சொன்ன ஒரே ஒரு நிபந்தனையை செயல்படுத்துங்கள் என்றேன். நான் வைத்திருக்கும் புளூ பிரிண்ட் விவாதிக்கப்பட வேண்டும் என்றேன். கட்சியில் நான் சேரும் முன்பு என்னால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை செயல்படுத்துங்கள் என்றேன். அப்படி செய்வதால் காங்கிரஸுக்குத்தான் பலன் கிடைக்கும் என்று சொன்னேன்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி
“மோதியை வீழ்த்தாமல் இந்தியாவை வெல்லுங்கள்“
காங்கிரஸுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை குறித்து அவரிடம் கேட்டோம்.
“மோதியை எப்படி வீழ்த்துவது என்பதல்ல இப்போதைய பிரச்னை. இந்தியாவை எப்படி வெல்வது? (இது மோதியை தோற்கடிப்பது பற்றி அல்ல, இந்தியாவை வெல்வது பற்றியது)” என்றார் பிரசாந்த் கிஷோர்.
காங்கிரஸ் உட்பட நாட்டின் பல அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அவர் பாஜகவின் அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதிக்காக வேலை செய்தார்.
மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 2015இல், அவர் மோதியின் பாஜகவில் இருந்து பிரிந்து, பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றிற்கான மாநில தேர்தல் வியூகத்தை உருவாக்கத் தொடங்கினார்.
அந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜியின் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதிலும் பிரசாந்த் கிஷோருக்கு பங்களிப்பு இருந்தது.
இதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்காக அவர் பணியாற்றினார். 2017ஆம் ஆண்டில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆலோசனை வழங்கினார். பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணியால் எந்த அற்புதத்தையும் களத்தில் நிகழ்த்த முடியவில்லை.
நிதீஷை ஈர்த்த பிரசாந்த் கிஷோர்
2017ஆம் ஆண்டில் பஞ்சாபில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை தனது அனைத்து வெற்றிகளுக்கும் முத்தாய்ப்பான ஒன்றாக கருதினார் பிரசாந்த் கிஷோர்.
காரணம், அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெல்ல முடியாமல் தடுத்ததை தமது தொழில் வாழ்க்கையின் சிறந்த தருணமாக அவர் கருதினார். பஞ்சாபில் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸின் வியூகவாதியாக பிரசாந்த் கிஷோர் இருந்தார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. பின்னர் பிரசாந்த் கிஷோர் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்காக அதனுடன் இணைந்து தேர்தல் வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
நரேந்திர மோதி, ராகுல் காந்தி, லாலு யாதவ், மமதா பானர்ஜி போன்ற தலைவர்களுடன் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், அனைத்து தலைவர்களையும் விட நிதிஷ் குமாரால் அதிகம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
“முன்பு நிதிஷ் ஜியால் நான் ஈர்க்கப்பட்டேன். இன்று இருக்கும் நிதிஷ் குமார் சரியாக இல்லாமல் போகலாம். ஆனால் அவரது செயல்பாடு என்னை இப்போது ஈர்க்கவில்லை. ஆனால், அதற்கு முன்பாக ஒரு கட்டத்தில் நான் நிதிஷ் குமார் மீதான தாக்கத்தால் அவரது கட்சியிலேயே சேர்ந்தேன். அந்த வகையில் நான் சேர்ந்த ஒரே கட்சி ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே என்று வைத்துக்கொள்வோம்,” என்றார் பிரசாந்த் கிஷோர்.
நம்மிடையே பேசும்போது தனது எதிர்காலம் குறித்தும் பிரசாந்த் கிஷோர் விவாதித்தார்.
“2021ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, ஒரு வருட காத்திருப்புக்குப் பிறகு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறியிருந்தேன். இரண்டு மூன்று நாட்களில் எனது ‘அந்த முடிவு’ என்பதை அறிவிப்பேன். நான் என்ன செய்வேன் என்பதை என்னால் பகிரங்கமாகச் சொல்ல முடியும். நான் என்ன செய்வதாக இருந்தாலும் அதே இரண்டு நாட்களில் சொல்வேன்,” என்கிறார் பிரசாந்த்.
பட மூலாதாரம், Getty Images
ஒருவேளை பிரதமர் மோதி மீண்டும் அழைத்தால்…
2014ஆம் ஆண்டு நரேந்திர மோதியின் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார், அதுபோல மீண்டும் பாஜகவில் ‘கர் வாப்சி’ போல திரும்புவீர்களா? என்று கேட்டோம்.
“நான் ஒருபோதும் பாஜகவில் இல்லை. எனவே ‘கர் வாப்சி’ என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?” என நம்மிடமே கேள்வி எழுப்பினார் பிரசாந்த்.
மேலும் பாஜவில் இணைவதற்கான வாய்ப்பை நிராகரித்த அவர், “என் முன்னே அப்படி எந்த வாய்ப்பும் இல்லை” என்று பதிலளித்தார்.
இன்னும் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொடர்பில் இருக்கிறீர்களா அல்லது அமித்ஷாவிடம் பேசுகிறீர்களா என்ற கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
“பிரதமர் உங்களை அழைத்தால், நான் உங்களிடம் பேசமாட்டேன் என்று சொல்லும் நபர் நாட்டில் யாராவது இருப்பார்களா? பிரதமர் நாற்காலியை மதிக்காமல் இருக்க முடியாது. அவர் அழைத்தால் பேசத்தானே வேண்டும்” என்கிறார் பிரசாந்த் கிஷோர்.
2024ஆம் ஆண்டில், பாஜகவின் எதிர்காலம் மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அது பற்றிய எந்தவொரு வியூகத்தையும் செய்ய அவர் மறுத்துவிட்டார்.
மேலும் அவர், “இந்த நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஒரு வலுவான அரசியல் சக்தியாக இருக்கும், அதை நாங்களும் நீங்களும் மறுக்க முடியாது, ஆனால் அந்த செல்வாக்கை மட்டும் வைத்துக் கொண்டு 2024 அல்லது 2029இல் பாஜக வெற்றி பெறும் என்று அர்த்தமல்ல” என்கிறார்.
பாஜகவை எந்த மூன்றாம் அணியாலும் எதிர்க்க முடியாது என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
“இந்த நாட்டில் எந்த ஒரு மூன்றாவது அல்லது நான்காவது அணியும் தேர்தலில் வெற்றிபெறும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவர் இரண்டாவது முன்னணியாக மாற வேண்டும். பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மூன்றாம் அணி முதலாவது அணியை தோற்கடிக்கும் என்று யார் சொன்னாலும் அதை நம்ப நான் ஒன்றும் முட்டாள் அல்ல. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எந்த அணி இருந்தாலும், அது இரண்டாவது அணியாகத்தான் இருக்க வேண்டும்.”
“நாட்டிலேயே இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் பாஜகவுக்கு சவால் விடும் வகையில் இரண்டாவது முன்னணி அமையவில்லை,” என்கிறார் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பிரசாந்த் கிஷோர் இரண்டு நாட்களுக்குப் பிறகு தமது அடுத்த நகர்வு பற்றிய தகவலை வெளியிடவிருக்கிறார். பிபிசி உடனான அவரது உரையாடலின்போது இதை அவர் நம்மிடையே வலியுறுத்தினார்.
“2024 மக்களவைத் தேர்தலின் போது, இந்தியா என்னை ஒரு வழக்கமான தேர்தல் வியூக வகுப்பாளராக இல்லாமல் ஒரு தலைவராகப் பார்க்கும்.”
பிரசாந்த் கிஷோரை காங்கிரஸுக்கு அழைத்த சோனியா காந்தி… ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :