கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிறந்து சில மாதங்களேயான குழந்தை ஒன்று சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. குழந்தையை டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அதன் கால்களில் செயல்பாடு இல்லாமல் இருந்தது. வேறு ஒரு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தின் மூலம் அக்குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்தின் போது குழந்தைக்கு முதுகுத் தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிறந்ததில் இருந்து குழந்தை செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு டாக்டர்கள் அதற்கு பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்ததில் குழந்தையின் முதுகுத்தண்டு சேதம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குழந்தைக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. குழந்தைக்கு வெறும் 6 மாதங்களே ஆகி இருந்த நிலையில், முதுகுத்தண்டை மெட்டல் கொண்டு சரி செய்வது முடியாத காரியமாக இருந்தது.

இதனால் எய்ம்ஸ் டாக்டர்கள் குழந்தைக்கு மெட்டல் இல்லாமல் முதுகுத்தண்டை சரிசெய்வது என்று முடிவு செய்தனர். இதற்காக குழந்தையின் தாயிடமிருந்து எலும்பை தானமாகப் பெற்று அதனைக் கொண்டு குழந்தையின் முதுகுத்தண்டை சரி செய்வது என்று முடிவு செய்தனர்.
ஆனால் இதில் வேறு பிரச்னையும் இருந்தது. தாய், மகன் இரண்டு பேருக்கும் வேறு வேறு வகை ரத்தம் இருந்தது. இதனால் குழந்தையின் உடல், தானமாகப் பெறப்படும் எலும்பை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் குழந்தைக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். தாய், மகன் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் நடந்தது.
தாயிடமிருந்து எலும்பை எடுக்க ஒரு பக்கம் ஆபரேஷன் நடந்தது. எடுத்த எலும்பைக்கொண்டு குழந்தையின் முதுகுத்தண்டை சரி செய்வதற்கான ஆபரேஷன் மற்றோர் அறையில் நடந்தது. குழந்தைக்கு 15 மணி நேரம் ஆபரேஷன் செய்து, தாயிடமிருந்து பெறப்பட்ட எலும்பை ஒட்டவைத்து முதுகுத்தண்டை சரி செய்தனர்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் தீபக் குப்தா கூறுகையில், “மெட்டல் இல்லாமல் முதுகுத்தண்டை சரிசெய்ய ஆபரேஷன் செய்ததில் எலும்பு சரியாக ஒட்டிக்கொண்டது. அதோடு முதுகுத்தண்டும் ஸ்திரத்தன்மை அடைந்தது. இந்த அளவுக்கு பச்சிளம் குழந்தைக்கு முதுகுத்தண்டை சரிசெய்ய இது போன்ற ஆபரேஷன் இந்தியாவில் இதற்கு முன்பு செய்யப்பட்டதில்லை. இதுவே முதல் முறையாகும்.

குழந்தையின் வயது மற்றும் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு தாயிடமிருந்து எலும்பு பெற்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மெட்டல் பயன்படுத்தப்படவில்லை. சிறப்பு வகை டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஆபரேஷன் ஆனதில் இருந்து 11 மாதங்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படவேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு கால்கள் ஓரளவு செயல்பட ஆரம்பித்துள்ளன” என்று தெரிவித்தார்.
குழந்தை மருத்துவமனையில் இருந்த 11 மாதங்களும் டாக்டர்களும், ஊழியர்களும் சிறப்பு கவனம் செலுத்தி குழந்தையை கவனித்துக்கொண்டனர். குழந்தை தனது முதல் பிறந்தநாளை மருத்துவமனையில்தான் கொண்டாடியது. தற்போது குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டாலும் இன்னும் ஓர் ஆண்டுக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.