பிரக்ஞானந்தா தோல்வி.. எஞ்சிய வீரர்கள் அசத்தலால் இந்திய பி தொடர்ந்து முதலிடம் – News18 Tamil

Share

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் ஆடவர் ‘பி’ அணியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார். இருந்த போதும், எஞ்சிய வீரர்கள் அசத்தியதால் ‘பி’ அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, முதலிடத்தை அலங்கரித்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் களைகட்டியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில், வெற்றிக்காக வீரர், வீராங்கனைகள் நுட்பமாக யோசித்து காய்களை நகர்த்தினர். இதன் 5-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி ருமேனியாவை எதிர்கொண்டது. முந்தைய சுற்றில் டிராவை சந்தித்ததால், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி தீவிரம் காட்டியது. இதில், வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜூன், ருமேனிய வீரர் மிர்சியா எமிலியயை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ், நாராயணன் ஆகியோர் டிரா செய்ததால், ஏ அணி போராடி வெற்றிபெற்றது.

ஆடவர் ‘பி’ அணி, ஸ்பெயின் அணிக்கு எதிராக களம் கண்டது. இப்பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஸ்பெயின் வீரர் சேன்டோஸிடம் 85-வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இது, அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும், தமிழக வீரர்களான குகேஷ் மற்றும் அதிபன் ஆகியோர் எதிராளியை வீழ்த்தி தோல்வியின் பிடியில் இருந்து அணியை காப்பாற்றினர். அத்துடன், நிஹில் டிராவை சந்தித்ததால், ஸ்பெயின் அணியை வென்று இந்திய ‘பி’ அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்தது.

இந்திய ஆடவர் ‘சி’ அணி, சிலி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 4-வது சுற்றில் தோல்வி கண்டதால், 5-வது சுற்றில் மீண்டெழும் நோக்கில் களமிறங்கியது. இந்த பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி தோல்வியை சந்தித்தார். அதேவேளையில், அபிமன்யு, சேதுராமன் வாகை சூடி அணிக்கு வலு சேர்த்தனர். சூர்ய சேகர் கங்குலி ஆடிய ஆட்டம் சமனில் முடிந்தால், சி அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

மகளிர் பிரிவை பொறுத்தவரை ஐந்தாவது சுற்றில் இந்திய ‘ஏ’ அணி, பிரான்ஸ் அணியை சந்தித்தது. தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் ஆடிய தானியா, 38-வது நகர்த்தலில் பிரான்சின் ஆண்ட்ரியாவை வீழ்த்தி, முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் கொனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி டிராவை சந்தித்ததால், இந்திய அணி பிரான்சை போராடி வீழ்த்தியது.

இதையும் படிங்க: காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

மகளிர் ‘பி’ அணி ஜார்ஜியாவுடன் மோதியது. இப்பிரிவில் வந்திகா அகர்வால், பத்மினி டிராவை சந்தித்த நிலையில், சவுமியா சாமிநாதன், திவ்யா தேஷ்முக் தோல்வியை தழுவினர். இதன் காரணமாக பி அணி ஜார்ஜியாவிடம் சரணடைந்தது.

மகளிர் ‘சி’ அணி பிரேசில் அணியை எதிர்கொண்டது. முந்தைய சுற்றில் தோல்வி கண்டதால் இந்த அணி நெருக்கடிக்கு ஆளானது. இதனால், பிரேசில் அணியுடன் போட்டியை டிரா மட்டுமே செய்ய முடிந்தது. அதேவேளையில், இப்பிரிவில், தமிழக வீராங்கனை நந்திதா 33-து நகர்த்தலில், தன்னை எதிர்த்து ஆடிய பிரேசில் வீராங்கனை லிப்ரலொதோ-வை வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ந்து ஐந்து சுற்றுகளிலும் நந்திதா வெற்றிபெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com