நெல்லை: ‘தமிழ்நாட்டில் கவர்னரை பின்னால் இருந்து ஒன்றிய அரசு இயக்குகிறது. சங்பரிவார் வட்டாரமாக கவர்னர் மாளிகை மாறி வருகிறது’ என்று வைகோ தெரிவித்து உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் அக்கிரமமான செயல் ஆகும். கவர்னர் சட்டமன்றத்திற்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பது கண்டிக்கதக்கது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இணைந்து குடியரசுத் தலைவரை நீக்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மாநில கவர்னரை நீக்க வாய்ப்பு இல்லை. கவர்னர் மாளிகை வட்டாரம் சங்பரிவார் வட்டாரமாக மாறிவருகிறது. தமிழ்நாட்டை பற்றி கவர்னருக்கு என்ன தெரியும். தமிழ்நாட்டில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேற்றப்பட வேண்டும்.
இதனை ஒன்றிய அரசு செய்யாவிடில் ஒன்றிய அரசும் சேர்ந்து வஞ்சகமாக இந்த செயலில் ஈடுபட்டு வருவதாக அர்த்தம். தமிழக எம்பிக்கள் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கவர்னரை பற்றி புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது பற்றி எனக்கு தெரியாது. தமிழ்நாட்டின் கவர்னரை பின்னால் இருந்து ஒன்றிய அரசு இயக்கி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 21 மசோதாக்கள் மீது கவர்னர் கையெழுத்து போடாமல் நிலுவையில் வைத்து உள்ளார். ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பதால் தமிழ்நாட்டில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டு நடத்துபவர்களை கவர்னர் அழைத்து தேநீர் விருந்து அளிக்கிறார். சேது சமுத்திர திட்டம் மசோதா தமிழ்நாட்டில் நிறைவேற்றியிருப்பது தேனினும் அமுதான செய்தியாகும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.