பிக்பாஷ் லீக் வரலாற்றில் முக்கிய ஒப்பந்தம் – சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாபர் அஸம்! | key addition in Big Bash League history Babar Azam joins Sydney Sixers

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெறும், ஐபிஎல்-க்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற, பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அஸமை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை பிக்பாஷ் லீக் வரலாற்றின் ஆக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் தேர்வு என்று ஆஸ்திரேலிய ஊடகம் உயர்த்திப் பேசியுள்ளது.

14 ஆயிரம் சர்வதேச ரன்களுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பிரமாதமான இன்னிங்ஸ்களை ஆடி சீரான முறையில் ரன்களைக் குவித்து வரும் பாபர் அஸம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதே போல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கேட் வீரர் என்ற விருதையும் தட்டிச் சென்றார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான பாபர் அஸம் தற்போது டி20 சர்வதேச கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் 12-ம் இடத்தில் உள்ளார். டி20-யில் 11,330 ரன்களை 43.07 என்ற சராசரியில் எடுத்துள்ளார் பாபர். இத்தனை ரன்களை இந்த அதிகபட்ச சராசரியுடன் இந்த வடிவத்தில் எந்த ஒரு வீரரும் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் அஸம் ஏற்கெனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரிமியர் லீக், இங்கிலாந்து உள்நாட்டு லீகுகள் என்று ஆடி வருபவர். ரோஹித் சர்மாவை முறியடித்து அதிக ரன்கள் என்ற அளவில் முதலிடத்தை பாபர் அஸம் பிடிக்க இன்னும் 9 ரன்களே தேவை.

டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள்:

>ரோஹித் சர்மா – 4,231 ரன்கள்

>பாபர் அசாம் – 4,223 ரன்கள்

>விராட் கோலி – 4,188 ரன்கள்

>ஜாஸ் பட்லர்- 3,700 ரன்கள்.

இப்போது சிட்னி சிக்சர்ஸ் அணியில் பெரிய வீரர்களுடன் இந்தப் பெரிய வீரரான பாபர் அஸமும் இணைகிறார். ஸ்டீவ் ஸ்மித், மோய்சஸ் ஹென்றிக்ஸ், ஷான் அபாட் போன்றவர்கள் ஏற்கெனவே அந்த அணியில் உள்ளனர். சிட்னி சிக்சர்ஸ் அணி 3 பிபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் சீசன் முழுதும் பாபர் அஸம் ஆடவிருக்கிறார்.

“சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. வெற்றிகரமான, மரியாதைக்குரிய அணியில் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன். அதே போல் சிட்னி சிக்சர்ஸ் ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதையும் நண்பர்கள், குடும்பத்தினர் பாகிஸ்தானின் என் ரசிகர்கள் ஆகியோருடன் பிக்பாஷ் அனுபவத்தை பகிர்வதில் மகிழ்கிறேன்” என்றார்.

இவர் மட்டுமல்லாமல் ஷாஹின் ஷா அஃப்ரீடி, ரிஸ்வான், ஆல்ரவுண்டர் ஷதாப் கான் போன்றோரும் வரும் பிக்பாஷ் லீகில் ஆடவுள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com