தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று முதல் பால் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பாலை லிட்டர் ரூ.35 என்ற விலைக்கும், எருமைப்பாலை லிட்டர் ரூ.44 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. பாலுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 10-ஆம் தேதி முதலாகவே தமிழகத்தில் சில பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விற்பனையை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று (16.03.2023) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தததைத் தொடர்ந்தே பால் நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு, ‘பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? பால் உற்பத்தியாளர்கள், ‘ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்’ என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (மார்ச் 17) செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், “தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு எதுவும் கிடையாது. பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. ஒரு சங்கம் தான் பால் தர மாட்டோம் என தெரிவித்துள்ளது. பிற பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் விநியோகத்தை வழக்கம் போல் செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.