உலகிலேயே அதிக கலப்படம் உள்ள பொருளாக பால் தான் அறியப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்பட பாலினால் சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மெட்ராஸ் ஐ.ஐ.டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிய முறையில் பால் கலப்படத்தை கண்டறியும் வகையிலான ஒரு கையடக்க கருவியை கண்டுபிடித்துள்ளானர். 3டி காகித அடிப்படையிலான இந்த சாதனத்தின் மூலம் 30 விநாடிகளுக்குள் கலப்படத்தை கண்டறியலாம்.
மேலும் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படும் யூரியா, சோப்பு, ஸ்டார்ச் மற்றும் ஹைட்ரஜன் கார்பனேட் ஆகிய வேதிப் பொருள்கள் எந்தெந்த அளவில் கலக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த கருவி கண்டுபிடித்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் மட்டுமின்றி குடிநீர், பழச்சாறு, போன்ற பிற திரவங்களில் உள்ள கலப்படங்களையும் பரிசோதிக்கலாம்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்களான சுபாஷிஸ் பட்டரி, டாக்டர் பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். இந்த பால் கலப்படத்துக்கான ஆய்வுக் கட்டுரை, மதிப்பாய்வு இதழான நேச்சரில் வெளியிடப்பட்டு உள்ளது.