சென்னை, வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள கழிவறையிலிருந்து இளம்பெண் ஒருவர், காவலன் செயலி மூலம் காவல்துறையினரின் உதவியை நாடினார். அப்போது அந்தப் பெண், `நான் ஆபத்திலிருக்கிறேன் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று தெரிவித்தார். அந்தப் பெண்ணுக்கு ஆறுதல், தைரியம் கூறிய காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், வேளச்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு சென்றபோது கழிவறைக்குள் இளம்பெண் ஒருவரும், அந்த அறைக்குள் இளைஞர் ஒருவரும் இருந்தனர். நிலைமையை தெரிந்துகொண்ட போலீஸார் இருவரிடமும் விசாரித்தனர். அப்போது இன்னொரு அறையில் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் இருப்பது தெரியவந்தது. அதனால் நான்கு பேரையும் அழைத்துக்கொண்டு போலீஸார் வேளச்சேரி காவல் நிலையத்துக்குச் சென்றனர்.
காவலன் செயலி மூலம் உதவி கேட்ட இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், “நானும் இன்னொரு அறையிலிருந்த இளம்பெண்ணும் பாலியல் தொழில் செய்து வருகிறோம். செல்போன் ஆப் மூலம் எங்களுடன் சந்தோஷமாக இருக்க 22,000 ரூபாயை இந்த இரண்டு இளைஞர்கள் கொடுத்தனர். பின்னர் கோயம்பேடு பகுதியிலிருந்து எங்களை கார் மூலம் வேளச்சேரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் நாங்கள் இருவரும் எங்களின் பார்ட்னர்களுடன் அறைக்குச் சென்றுவிட்டோம். அப்போது என்னுடன் தங்கியிருந்த இளைஞர், ஒரு தடவை சந்தோஷமாக இருந்தார். பின்னர் மீண்டும் என்னுடன் சந்தோஷமாக இருக்க என்னைக் கட்டாயப்படுத்தினார். அவர் ஒரு தடவை மட்டுமே சந்தோஷமாக இருக்க எங்களுக்கு பணம் கொடுத்திருந்தார். அதை நான் அவரிடம் தெரிவித்தபோது என்னை மிரட்டினார். அதனால்தான் நான் கழிவறைக்குச் சென்று காவலன் செயலி மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தேன்” என்று கூறினார்.