பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் பான் 2.0 என்ற வார்த்தையை அதிகம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது உங்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். பான் கார்டை பற்றி நமக்கு நன்றாகத் தெரியும், ஆனால் பான் 2.0 என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பொருளாதார அமைச்சரவைக் குழு, பான் 2.0 திட்டத்திற்குக் கடந்த திங்களன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக வருமான வரித்துறை ரூ.1,435 கோடி செலவு செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பழைய பான் கார்டு வைத்திருப்பவர்களின் நிலை என்ன, அனைவரும் புதிய பான் கார்டையோ அல்லது எண்ணையோ பெற வேண்டுமா, இதற்கான கட்டணம் என்ன என்று மக்கள் மனதில் பல கேள்விகள் எழும். அந்தச் சந்தேகங்கள் அனைத்துக்குமான விடையை நீங்கள் இங்கே பெறலாம்.
பான் 2.0 என்றால் என்ன?
முதலில் பான் 2.0 என்றால் என்னவென்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பான் கார்டு ஒவ்வோர் இந்தியரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஓர் அங்கம். அதிலும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சிறு தொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் அவசியம். இந்த பான் கார்டின் மேம்பட்ட பதிப்புதான் பான் 2.0.
இதைப் பற்றிப் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “தற்போது செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் புதிய முக்கிய மேம்பாடுகள் செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.
பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிதாகப் பெற வேண்டுமா?
வேண்டாம். பழைய கார்டு வைத்திருப்பவர்கள் புதிதாக வழங்கப்படும் பான் கார்டுக்கோ அல்லது புதிய எண்ணிற்கோ விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் குறிக்கோள், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் பான் கார்டுகளை பாதிக்காத வகையில் புதிய அம்சங்களைக் கொண்டு வருவதுதான்.
பான் கார்டில் மேம்பாட்டு அம்சங்களை பெறுவதற்கான கட்டணம் எவ்வளவு?
வரி செலுத்தும் அனைவரும் QR குறியீடு போன்ற புதிய அம்சங்களைத் தங்களுடைய இ-பான் கார்டுகளில் பெற எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் பான் கார்டை கைகளில் பெற 50 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பான் 2.0-வில் உள்ள புதிய அம்சங்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
1. ஒருங்கிணைக்கப்பட்ட தளம் என்றால் என்ன?
பான் கார்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் பெறக்கூடிய வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தளம் ஒன்று அமைக்கப்படும். இதனால் பயனாளர்கள் தங்களது கணக்கை அணுகவும் நிர்வகிக்கவும் முடியும். ஏனென்றால் தற்போது செயல்பட்டு வரும் தளம் 10 முதல் 15 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதில் புதிய தொழில்நுட்பங்களை இணைக்கின்றனர்.
2. பயனாளர்களின் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படும்?
தற்போது செயல்பட்டு வரும் இணையப் பாதுகாப்பு வழிமுறைகள் இன்னும் வலுப்படுத்தப்படும். இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத நபர்களோ அல்லது நிறுவனமோ வரி செலுத்துபவரின் தரவுகளைப் பார்க்கவோ, திருடவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
3. பான் 2.0 திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
பான் கார்டு திட்டம் முற்றிலுமாக காகிதமில்லாத முறையில், அதாவது டிஜிட்டல் முறையில் செயல்படுவதால், சுற்றுசூழலுக்கு இது பாதுகாப்பானது.
‘பொது வணிக அடையாளங்காட்டி’ என்றால் என்ன?
பட மூலாதாரம், X/PIB_India
‘பொது வணிக அடையாளங்காட்டி (Common Business Identifier)’ அதாவது அரசின் அனைத்துத் தளங்களுக்கும் தொழில்ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய பொதுவான ஒற்றை அடையாளம் ஒன்றை அறிமுகப்படுத்த தொழில் துறையில் உள்ளவர்கள் கோருகின்றனர் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இது பயன்பாட்டிற்கு வந்தால் வர்த்தகர்கள் தொழில் ரீதியாகப் பல கார்டுகளையோ அல்லது எண்களையோ வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
“அதனால் இந்த பான் எண்ணை ஒருங்கிணைக்கப்பட்ட அடையாள அட்டையாக மாற்றத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்” என்றார் அவர்.
மக்கள் ஏன் பான் 2.0வை பயன்படுத்த வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
பான் கார்ட் வழங்கிய நன்மைகளைவிட இந்த 2.0 திட்டத்தில் பல நல்ல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலமாக, பான் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசம் குறைக்கப்படும். அதனால் பயனாளர்களுக்கு அவர்களுக்குத் தேவையான சேவை துரிதமாகக் கிடைக்கும்.
டிஜிட்டல் வழியில் செயல்படுவதால், வரி செலுத்துபவர்களின் தரவுகளில் ஏற்படும் தவறுகள் குறைக்கப்பட்டு, நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
இந்த அமைப்பு மூலமாக மக்களின் குறைகள் சிறப்பாகக் கையாளப்படும். மேலும் அவர்களின் குறைகள் விரைவாகத் தீர்த்து வைக்கப்படும்.
இந்திய அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு மையம் (PIB) வழங்கிய தகவலின்படி, பான் 2.0 என்பது நிரந்தரக் கணக்கு எண்ணை மேம்படுத்தி வரி செலுத்துபவர்களின் டிஜிட்டல் அனுபவத்தை எளிமையானதாக மாற்றுகிறது.
அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பான்/டான் சேவைகள் காகிதமின்றி டிஜிட்டல் முறையில் செயல்படுவதால் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது.
பான் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட தளமும், பயனாளர்களின் தரவுகளை மிகத் துல்லியமாகப் பாதுகாக்கக் கூடிய மேம்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்பும்தான் இந்தத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க பெரிய மேம்பாடு.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு