புளிப்பு சேர்த்த கூட்டு சேர்க்காத கூட்டு என இரண்டு வகையாகச் சமைப்போம் அல்லவா.. புளி சேர்க்காத கூட்டுகளைத் தேங்காய் இன்றி சமாளித்துக் கொள்ளலாம். புளி சேர்த்த கூட்டு வகைகளுக்கு அவரவர் வழியில் சிறிது தேங்காய் அரைத்து அல்லது பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இல்லாமலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
எலுமிச்சை சேர்த்த தால் அல்லது மசியல் வகைகளுக்கு காரத்துக்கு பச்சை மிளகாய் வற்றல் இஞ்சி வாசனைக்கு கறிவேப்பிலை கொத்துமல்லி பெருங்காயம் வெந்தயத் தூள் இருந்தாலே போதும். இவற்றுக்கு கடுகுடன் சிறிது கடலைப் பருப்பும் தாளித்தால் எலுமிச்சைப் புளிப்பில் ஊறி உண்ணுகையில் சுவை கூட்டும்.
உணவு சமைப்பதிலும் எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்கிற மாதிரி உள்ளதை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிச் சுற்றி வந்தால் சுவாரஸ்யம் கூடும். அதுதான் விஷயமே..
உதாரணத்துக்கு வெள்ளரிக்காய் நல்லது சாப்பிடுங்கள் என்று தினம் வெட்டி வைத்தால் சலித்துப் போகும்.
சிறு துண்டுகளாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை சிறிதளவு எண்ணெயில் காரச் சுவைக்குத் தேவைப்படும் அளவு பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் அல்லது மிளகாய்த்தூள் விரும்பினால் துருவிய இஞ்சி சிறிது கறிவேப்பிலை உப்பு சேர்த்து லேசாகப் பிரட்டி வெந்த பருப்பில் கலந்து உப்புடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து மல்லித்தழை தூவி சூடாக சாப்பிட்டுப் பாருங்கள்…..
இப்படியே ஓட்டி விட முடியுமான்னு சலித்துக் கொள்ளவும் வேண்டாமே…
வாரக் கடைசி விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை விருந்துல்ல சமைப்பேன்..
பொறுங்கள்.. அதைப் பற்றியும் சொல்கிறேன்..
–மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்