சென்னை: பாஜ தலைமை யாரையும் பந்த் நடத்தும்படி நிர்பந்திக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: கடலூரில் நான் பேசியது குறித்து வழக்கம் போல சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. கோவை பந்த் தொடர்பாக நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பாஜ தலைமை பந்த் நடத்த வேண்டும் என யாரையும் நிர்பந்திக்க மாட்டோம்.
கோவை மாவட்ட பாஜவினர் மக்களின் ஆதரவை பெற்று அங்கு பந்த நடத்துவது என்பது அவர்களது விருப்பம். கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு குறித்து 18ம் தேதியே மத்திய உள்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியது. ஆனால் 21ம் தேதி மாலை தான் மாநில உளவுத்துறை மத்திய உளவு துறை அறிக்கையை எடுத்து, சில விசயங்களை அதனுடன் இணைத்து அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. 4 நாட்கள் தாமதம் செய்துள்ளனர். டிஜிபியும், கோவை மாநகர கமிஷனரும் மத்திய உளவுத்துறையிடமிருந்து அறிக்கை வரவில்லை என்று கூறுகின்றனர்.
ஆனால், மாநில உளவுத்துறையால் 21ம் தேதி அனுப்பப்பட்ட கடிதம் என்னிடம் இருக்கிறது. அதை இப்போது என்னால் வெளியிட முடியவில்லை. மாநில அரசு சம்மன் அனுப்பினால் வெளியிட தயாராக இருக்கிறேன். பின்னர் பொது வெளியிலும் அவற்றை வெளியிடுவேன். பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11ம் தேதி திண்டுக்கல்லில் உள்ள மகாத்மா காந்தி கிராமிய பல்கலை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.