தாகத்தோடு சேர்த்துப் பசியையும் ஆற்றும் சக்தி தர்பூசணிப் பழத்துக்கு உண்டு. சீசனில் கிடைக்கும் தர்பூசணியின் சிவப்பான சதைப்பற்றுப் பகுதியை மட்டும் ருசித்துவிட்டு, தோல் பகுதியை தூர வீசுகிறோம். ஆனால் பழத்தைப் போலவே அதன் தோலிலும் சத்துகள் உள்ளன.

தர்பூசணியின் தோலிலும் விதம் விதமான ரெசிப்பீஸ் செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இனி தர்பூசணி சாப்பிடும்போது அதன் தோல்பகுதியை பத்திரப்படுத்துங்கள். வீக் எண்டில் விருந்தே சமைக்கும் அளவுக்கு அதில் செய்ய ஏராளமான ரெசிப்பீஸ் உள்ளன.
வாட்டர்மெலன் ரிண்ட் கோஃப்தா சால்னா
தேவையானவை – அரைக்க:
* எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
* சீரகம் – ஒரு டீஸ்பூன்
* சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
* பட்டை – ஒரு இன்ச் துண்டு
* மிளகு – 2 டீஸ்பூன்
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
* பூண்டு – 8 பல்
* தோல் சீவிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு
* கொத்தமல்லித்தழை – சிறிதளவு
* புதினா – சிறிதளவு
* மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
* மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
* தேங்காய்த் துருவல் – கால் கப்
சால்னா செய்ய:
* எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
* கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
* வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* உப்பு – தேவையான அளவு
கோஃப்தா செய்ய:
* வாட்டர்மெலன் ரிண்ட் (துருவியது) – ஒரு கப்
* கடலை மாவு – கால் கப்
* மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
* கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
அலங்கரிக்க:
* பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
கோஃப்தா செய்யக் கொடுத்துள்ள கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றை ஒரு பேஸினில் சேர்க்கவும். வாட்டர்மெலன் ரிண்ட் துருவலைப் பிழிந்து எடுக்கவும். துருவலை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும் (தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). மாவைச் சம அளவு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரிக்கவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி அரைக்கக் கொடுத்துள்ள பொருள் களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும் (வெங்காயம் வெளிர் பழுப்பு நிறத்துக்கு மாறும் வரை, தக்காளி மிருதுவாக ஆகும் வரை வதக்கவும்). பிறகு கீழே இறக்கி ஆறவிட்டு நைஸான விழுதாக அரைத்து தனியே வைக்கவும்.
சால்னா செய்யக் கொடுத்துள்ள எண்ணெயைக் கடாயில் சேர்த்துச் சூடாக்கி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு அரைத்துவைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும். மூடி போட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். இப்போது பொரித்த கோஃப்தா சேர்த்து, கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரித்து இறக்கவும். இட்லி, தோசை, பராத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.
வாட்டர்மெலன் ரிண்ட் பாசந்தி
:
* கொழுப்பு நீக்கப்படாத பால்
(full fat milk) – ஒரு லிட்டர்
* வாட்டர்மெலன் ரிண்ட்
(துருவியது) – கால் கப்
* சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
* குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
* நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
* ரோஸ் எசென்ஸ் – ஒரு துளி
அலங்கரிக்க:
* பாதாம், பிஸ்தா துருவல்,
குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை:
கடாயில் நெய்விட்டு வாட்டர் மெலன் ரிண்ட் துருவல் சேர்த்து, ஈரப்பதம் முழுவதுமாக நீங்கும் வரை நன்கு வதக்கவும். பாலை 2 நிமிடங்கள் காய்ச்சி, அதிலிருந்து 2 டேபிள்ஸ்பூன் எடுத்து ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் சேர்க்கவும்.
மீதமுள்ள பாலை பாதியாக சுண்டும் வரை கொதிக்கவிடவும். பிறகு சர்க்கரை, ஊறவைத்த குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வதக்கிய வாட்டர்மெலன் ரிண்ட் துருவல் சேர்த்துக் கெட்டியாகவும், க்ரீம் போலவும் ஆகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு இறக்கி, ரோஸ் எசென்ஸ் சேர்த்து, பாதாம், பிஸ்தா துருவல், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
வாட்டர்மெலன் ரிண்ட் ஹண்ட்வோ
தேவையானவை:
* வாட்டர்மெலன் ரிண்ட்
(பொடியாக நறுக்கியது) – அரை கப்
* அரிசி – ஒரு கப்
* கடலைப்பருப்பு – கால் கப்
* துவரம்பருப்பு – கால் கப்
* பாசிப்பருப்பு – கால் கப்
* தயிர் – அரை கப்
* பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)
* தோல் சீவி பொடியாக
நறுக்கிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
* மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
* ஃப்ரூட் சால்ட் – அரை டீஸ்பூன்
* சீரகம் – அரை டீஸ்பூன்
* எள் – ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
* பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
* எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு

செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றைக் கழுவி, 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும். இதை தயிர் சேர்த்து ரவை பதத்தில் அரைக்கவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). மாவைப் பாத்திரத்துக்கு மாற்றவும். அதில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய வாட்டர்மெலன் ரிண்ட், ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலக்கவும். மாவை எண்ணெய் தடவிய பேக்கிங் பாத்திரத்துக்கு மாற்றவும்.
கடாயில் எண்ணெய்விட்டு சீரகம், எள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து மாவின் மேலே சேர்க்கவும். பேக்கிங் பாத்திரத்தை அவனில் வைத்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 15 – 20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.
ஹண்ட்வோ தயார்.
இதே ரெசிப்பியை கடாயிலும் செய்ய லாம். தாளிதம் செய்த பிறகு, மாவைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, வேகவிட்டுத் திருப்பிப் போட்டு இருபுறமும் மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.
இதை கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.
வாட்டர்மெலன் ரிண்ட் சேவரி மஃபின்ஸ்
தேவையானவை:
* வாட்டர்மெலன் ரிண்ட்
(துருவியது) – அரை கப்
* மைதா மாவு – ஒரு கப்
* பூண்டுப் பொடி (garlic powder) –
கால் டீஸ்பூன்
* ரெட் சில்லிஃப்ளேக்ஸ் –
ஒரு டேபிள்ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் – அரை டேபிள்ஸ்பூன்
* சோள முத்துகள் – கால் கப்
* பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
* துருவிய சீஸ் – கால் கப்
* வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
* முட்டை – ஒன்று (உடைத்து, நன்கு அடித்து பாதியளவு எடுத்துக்கொள்ளவும்)
* பால் – அரை கப்
* உப்பு – அரை முதல்
முக்கால் டீஸ்பூன் வரை

செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா, பூண்டுப் பொடி, ரெட் சில்லிஃப்ளேக்ஸ், பேக்கிங் பவுடர், வாட்டர்மெலன் ரிண்ட் துருவல், சோள முத்துகள், துருவிய சீஸ், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் பால், அடித்த முட்டை, வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து மைதா கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்தக் கலவையை மஃபின் கப்களில் முக்கால் பாகம் அளவுக்கு ஊற்றவும் (எந்த வடிவ மஃபின் கப்களிலும் ஊற்றலாம்). இதை ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 180 டிகிரி சென்டிகிரேடில் 20 – 25 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, ஆற விடவும். மயோனைஸ் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.