பழனி வ. உ. சி. மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் மட்டுமே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த அறையின் முன்பு சிலர் குடித்துவிட்டு படுத்து உறங்குகின்றனர். மது பாட்டில்களையும் ஆங்காங்கே வைத்துவிட்டுச் செல்கின்றனர். முகம் சுளிக்கும்படியான போதை ஆசாமிகளின் செயல்கள் பெண்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையானது திறக்கப்பட்டாலும் இங்கே வருவதற்கு பெண்கள் அச்சப்படுவார்கள்.
எனவே முதலில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி, அதன் பிறகு இந்த அறையையும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தாய்மார்கள் கோரிக்கை வைக்கின்றனர். அருகாமையில் உள்ள பயணிகள் ஓய்வறையும் தகுந்த பராமரிப்பின்றி காணப்படுகிறது. இவற்றை உடனே சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்த பேருந்து நிலையத்தில் புதிதாக வணிக வளாகங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.