சென்னை: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படுகர் இன மக்கள் பழங்குடியின மக்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். படுகர் இன மக்கள் அளித்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, பிற பழங்குடியின மக்களான ‘தோடர்’ இன மக்களுடன் ‘படுகர்’ இன மக்கள் பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலையில் வாழ்ந்து கொண்டிருப்பது தெளிவாகிறது.
படுகர் இன மக்களின் வாய்மொழி இலக்கியம், கோட்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவை நீலகிரி பழங்குடி மக்களுடன் அவர்களுக்குள்ள இணைப்பை வெளிப்படுத்தும். பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான முக்கிய குணாதிசயங்களில் ஒன்றான புராதன பழங்குடியினர் என்ற காரணி படுகர் இன மக்களுக்கு நிச்சயம் பொருந்தும். இதன்மூலம், பழங்குடியினர் என வகைப்படுத்துவதற்கு உண்டான விரிவான குணாதிசயங்களை படுகர்கள் பூர்த்தி செய்திருப்பதால், பழங்குடியின பட்டியலில் சேர்க்க படுகர் இன மக்கள் முழுத் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்க வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.