பள பள “பலா'' ரெசிபிகள்.. இதோ உங்களுக்காக! – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

Share

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

என் கணவரின் பணி நிமித்தம் காரணமாக பண்ருட்டியில் இரண்டு வருடங்கள் வசிக்க நேர்ந்தது. பண்ருட்டி என்றாலே உங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலாப்பழம். ஆம் .. அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் பலாப்பிஞ்சை வைத்து சர்வ சாதாரணமாக நிறைய நிறைய புதுப்புது சமையல்களை செய்து வந்தனர். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட சில ரெசிபிகளின் செய்முறையை உங்களுக்கு கொடுத்துள்ளேன். நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்களேன்.

1.பலா க்ரிஸ்பிஸ்.

தேவையான பொருள்கள்

பலாப்பிஞ்சு _ கால் பாகம்

கடலைமாவு _ஒரு கப்

வெங்காயம் _ ஒன்று

இஞ்சி _சிறு தண்டு

பூண்டு_ 4 பல்

பச்சை மிளகாய்_3 கறிவேப்பிலை, மல்லித்தழை_ சிறிதளவு .

உப்பு எண்ணெய்_ தேவையான அளவு.

பலாக்காய்

செய்முறை.

பலா பிஞ்சை சுத்தம் செய்து தோல் மற்றும் நடுப்பகுதியை நீக்கி விட்டு மீதமுள்ளதை மிக மெல்லிய வில்லைகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்துவிட்டு வைக்கவும். வெங்காயம் மல்லித்தழையை மிகவும் பொடியாக நறுக்கவும். இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும் .

நறுக்கிய பலாவுடன் கடலை மாவு, வெங்காயம் ,நசுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை தேவையான உப்பு ,ஒரு கரண்டி சூடான எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு நீர் தெளித்து பிசறவும். வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பலா கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பரவலாகத் தூவி வேக வைத்து எடுக்கவும். மொறுமுமொறுப்பு பாதி ,மெதுமெதுப்பு பாதி கலந்த அருமையான நொறுக்ஸ் தயார். அருமையான மாலை நேர சிற்றுண்டி.

2.ஹாட் கோப்தா

தேவையான பொருட்கள்

சிறிய பிஞ்சு பலாக் காய்_ 1

பெரிய வெங்காயம் _2

பச்சை மிளகாய் _4

இஞ்சி _சிறு துண்டு

பூண்டு_ 5 பல்

புதினா ,மல்லித் தழை_ தலா ஒரு கைப்பிடி

பொட்டுக்கடலை மாவு _ஒரு கப் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்

உப்பு எண்ணெய் _தேவையான அளவு.

Representational Image

செய்முறை

பலாப்பிஞ்சை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம் ,பச்சை மிளகாய், இஞ்சி ,பூண்டு ,புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்‌. இதனுடன் மசித்த பலாப்பிஞ்சு, மிளகாய்த்தூள் பொட்டுக்கடலை மாவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சுட சுட இந்த ஹாட் கோப்தாவைதக்காளி சாஸ் தொட்டு சாப்பிட …தட்டு நிமிடத்தில் காலியாகும்.

3.காரசாரமான..ஸ்டப்டுபராத்தா

தேவையான பொருட்கள்.

பராத்தாவுக்கு..

கோதுமை மாவு 2 கப், நெய் 2 டேபிள்ஸ்பூன் உப்பு எண்ணெய் தேவையான அளவு.

ஸ்டப்பிங்குக்கு

பிஞ்சு பலாக் காய் _பாதி அளவு

வெங்காயம் _ஒன்று

பட்டை_ ஒரு துண்டு

லவங்கம் ,ஏலக்காய் _தலா ஒன்று

இஞ்சி_ சிறு துண்டு

பூண்டு_ 4 பல்

தனி மிளகாய்த்தூள்_ ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை_ சிறிதளவு

உப்பு எண்ணெய் _தேவையான அளவு.

Representational Image

செய்முறை

கோதுமை மாவுடன் உப்பு ,நெய் சேர்த்து நன்கு கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். பலாக்காயின் தோல் நடுப்பகுதி நறுக்கி எடுத்து விட்டு மீதமுள்ளதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பட்டை லவங்கம், ஏலக்காய் ,இஞ்சி பூண்டு ,மிளகாய்த்தூள், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைக்கவும்.

வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி உப்பு கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து கிண்ணம் போல செய்து பலாக்கலவையை உள்ளே வைத்து மூடி மெதுவாக தேய்க்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து பரோட்டாவை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும் . சூடான காரசாரமான ஸ்டஃப்பிங் பரோட்டா உங்களைப் பார்த்து ஹாய் சொல்லும்.

4. பலாக்காய் பாலக் க்ரேவி

தேவையான பொருட்கள்

பலாப்பிஞ்சு _பாதி

பசலைக் கீரை _ஒரு கட்டு வெங்காயம் _2

தக்காளி _2

இஞ்சி பூண்டு விழுது_ 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்_ ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் _ஒன்று

உப்பு எண்ணெய் _தேவையான அளவு .

தாளிக்க_ சீரகம் அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 2

பூண்டு 4 பல்

எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.

பலா

செய்முறை

பலாப்பிஞ்சை தோல், நடுப் பகுதியை நீக்கி விட்டு மீதமுள்ளதை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்துவிட்டு எடுத்துக்கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும். வெங்காயம் தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் , தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .வேகவைத்த பலா பிஞ்சு +அரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் கீரையை அதன்மீது பரவினாற்போல் வைத்து மூடவும் .10 நிமிடம் வேகவிடவும் (கிளறக் கூடாது )

10 நிமிடத்திற்கு பிறகு திறந்து வெந்துள்ள கீரையை மேலாக எடுத்து மிக்ஸியில் நன்கு மசித்து பலாப்பிஞ்சு மசாலாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி கீரை பலாப்பிஞ்சு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். சூடான சாதத்தில் இந்த பலாக்காய் பாலக் கிரேவியை போட்டு சாப்பிட சுவை அள்ளும்.

என்னடா எல்லாமே காரமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இதோ இனிப்புப் பிரியர்களான உங்களுக்கே உங்களுக்காக ஒரு சுவையான இனிப்புரெஸிபி.

5.பலாப்பிஞ்சு கீர்

தேவையான பொருட்கள்

பலா பிஞ்சு_ கால் பகுதி

கடலைப்பருப்பு _அரை கப்

பாசிப்பருப்பு _கால் கப்

கெட்டி தேங்காய்ப்பால்_ ஒரு கப்

வெல்லம்_ ஒரு கப்

பொடியாக நறுக்கிய தேங்காய்_ 2 டேபிள் ஸபூன்

நெய் _2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் _ஒரு டீஸ்பூன்.

Representational Image

செய்முறை

பலா பிஞ்சை சுத்தம் செய்து தோல் மற்றும் நடுப் பகுதியை நீக்கி விட்டு மீதமுள்ளதை மிக மிகப் பொடியாக நறுக்கி சிறிதளவு நீர் சேர்த்து நன்கு வேக வைத்து நீரை வடித்து விட்டு வைக்கவும் .

கடலைப் பருப்பு பாசிப் பருப்பை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இந்த வெல்லக்கரைசலில் பலா துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும் .

பிறகு வெந்த பருப்புகளை சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் தேங்காய்ப்பால் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். நெய்யை சூடாக்கி அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை நன்கு சிவக்க வறுத்து கீரில் போட்டு அழகான வளைக்கரங்களால் பரிமாறவும்.

என்ன சகோதரிகளேஇந்த பலாப்பிஞ்சு ரெசிபிகள் போதுமா .. எங்கே…எல்லாரும் வேகமா கிளம்பிட்டீங்க!பலாப்பிஞ்சு வாங்கவா. சந்தோஷமா வாங்கி சந்தோஷமா சமையல் செய்து சந்தோஷமா பரிமாறுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com