கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள பாலி புதுக்காலனி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசால் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலியும், சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோல நிகழ்வுகள் நடைபெற்றதால் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மாத்திரைகளின் தரம் சரிபார்க்கப்பட்ட பிறகு பொருத்தமான வழிமுறைகள் வழங்கப்படும். அதன் பிறகு இந்தத் திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அனுப்பிய செய்தி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.