முறுக்கு என்றதும் அனைவருடைய நினைவுக்கும் சட்டென வருவது மணப்பாறை தான். அந்தளவிற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா எனப் பல்வேறு வெளிநாடுகளுக்கும் மணப்பாறை முறுக்கு செல்கிறது. இத்தகைய புகழ்வாய்ந்த மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென, மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மணப்பாறை முறுக்கிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறது. இதனால் மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் இத்தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மணப்பாறையைச் சேர்ந்த ‘இசைப்பிரியா ரிலாக்ஸ் நெய் முறுக்கு’ கடையின் உரிமையாளரான ஜேம்ஸிடம் பேசினோம். “புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தையை விட, மணப்பாறை முறுக்கினுடைய புகழ் உலகம் முழுக்கப் பரவிக் கிடக்கிறது.
மணப்பாறை பகுதியிலுள்ள சுவையான தண்ணீரும், பாரம்பர்யமாக முறுக்கினைச் செய்து வருபவர்களின் கைப்பக்குவமும் தான், மணப்பாறை முறுக்கின் புகழை அரை நூற்றாண்டுக்கு மேலாக தக்க வைத்திருக்கிறது. முறுக்கின் சுண்டியிழுக்கும் வாசனை, மொறுமொறுவென்ற பதம், முறுக்கினுடைய தரத்தினாலும் தான் எங்களுடைய முறுக்கிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.