வேல்ஸ் நாட்டின் கேஃபில்லியை சேர்ந்த மிட்செல் போக் என்ற நபர், ஐஸ் தண்ணீரில் குளித்ததால் பல ஆண்டுகளாக, தான் அனுபவித்து வந்த மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கியதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தனை நாள்களாக மனச் சோர்வுக்கு எதிராக எடுத்துக்கொண்ட மருந்துகளையும் முற்றிலும் நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.

30 வயதான அவர், ஐஸ் தண்ணீர் குளியலால் தனக்கு நேர்ந்த நன்மைகள் குறித்து பேசியுள்ளார். “ஒருநாள் முழுவதும் நீடிக்கும் உடல் சோர்வு, மனச்சோர்வு அசௌகர்யத்தை சில நிமிட ஐஸ் குளியல் மாற்றியதை என் கண் முன்னால் அனுபவித்து வியந்தேன். இதனால் நான் அற்புதமாக உணர்கிறேன். இது மனச் சோர்வை நீக்கும் உடனடியாக ஒரு விஷயமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மனச்சோர்வு மற்றும் பதற்றத்துடன் போராடும் ஒரு நபருக்கு ஐஸ் குளியல் தெரபி ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி விளக்கியுள்ள மனநல நிபுணர்கள், “ஐஸ் குளியல், சற்று குளிர்ந்த நீரில் மூழ்குதல் ஆகியவை ஒருவிதமான சிகிச்சை நடைமுறைதான். பொதுவாக ஒருவர் 15 டிகிரி செல்சியஸ் உள்ள குளிர்ந்த நீரில் மூழ்கும் போது அவருக்கு தசைகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம் போன்றவை குறைய இது உதவுகிறது.

விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சிக்குப் பிறகு அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். விரைவான வெப்பநிலை மாற்றம் ரத்த நாளங்கள் இறுக்கமடைய காரணமாகிறது. இது தசைகளில் இருந்து கழிவுகளை அகற்றவும் சுழற்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆனால் ஐஸ் குளியல் மூலம் மனநல பிரச்னைகள் குணமாகும் என்று எந்த உறுதியான தகவலும் இல்லை. ஐஸ் குளியலால் சில நன்மைகள் இருக்கலாம். ஆனால் இது மனச் சோர்வு மற்றும் பதற்றத்தை குணப்படுத்தாது. இதற்கான ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இது சிகிச்சையாகப் பரிந்துரைக்கபடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.