சிகிச்சை முறைகள்:
பல் சொத்தையை, அது எனாமலில் இருக்கும்போதே கவனித்து விட்டால், மிக எளிதாக Resins மற்றும் Pit and fissure sealants மூலம் சொத்தையை எடுத்துவிட்டு அடைத்து விடலாம். இதுவே டென்ட்டினில் சொத்தை பரவி விட்டால், அது மேலோட்டமாக இருந்தால், வெள்ளி மற்றும் பற்கள் நிறத்திலேயே உள்ள சில பொருள்களை வைத்து பல்லை அடைத்து விடலாம்.
ஆனால், இதுவே பல் சொத்தை கொஞ்சம் ஆழமாக இருந்தால், மருந்து பொருளை ( calcium hydroxide) வைத்து, அதன் மேல் தற்காலிகமாக அடைத்து விடுவோம். அதற்கு பிறகு வலி எதுவும் வரவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு, பின்னர் வேறொருநாளில் நிரந்தரமாக அடைத்துவிடுவோம். இதுவே சொத்தை pulp என்ற ஆழமான இடத்திற்குப் பரவி விட்டால், பெரும்பாலும் வேர் சிகிசிச்சை ( Root canal treatment) தான் செய்யப்படும். இந்தச் சிகிச்சையில் தொற்றுக்கு ஆளான திசுக்களை முற்றிலுமாக எடுத்துவிட்டு அந்த இடத்தை அடைத்து விடுகிறோம். இந்த முறையில், வலி வந்த பற்களைப் பிடுங்காமல் காப்பாற்ற முடிகிறது. என்ன இருந்தாலும் நம் சொந்தப் பல்லுக்கு அது ஈடாகுமா?
மாத்திரைகள் தீர்வல்ல…
பல் சொத்தையைப் பொறுத்தவரை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இது மாத்திரைகளால் சரிசெய்யக்கூடிய நோய் அல்ல. பாதிப்புக்கு ஏற்ப முழுக்க பற்களில்தான் சிகிச்சை செய்ய வேண்டும். மாத்திரை என்பது தற்காலிகமான வலி நிவாரணியே.
நிறைவாக, இந்த வாரத்தின் Take Home Message…. பற்களைத் தேய்ப்பதற்கு சிறந்த கருவி fluoridated பற்பசை மற்றும் டூத் பிரஷ். இது எந்த பிராண்ட் என்றாலும் சரி. வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம்.
அன்றாடம் ‘டென்ட்டல் ஃப்ளாஸ்’ (Dental floss) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது பற்களின் இடுக்கில் இருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற உதவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக பல் மருத்துவரைச் சந்திக்கவும்.
அடுத்த வாரம்… வாய்க் குழியில் (Oral Cavity) ஏற்படும் புற்றுநோய் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!
பராமரிப்போம்…