
ராஜ்கோட்: பலமுறை அணியில் தேர்வாகாமல் டிராப் செய்யப்பட்ட சூழலிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்ற கனவு மட்டும் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்.
இந்திய அணிக்காக இதுவரை டி20 கிரிக்கெட்டில் 97 வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். டி20 பார்மெட்டுக்கான இந்தப் பட்டியலில் இந்திய அணிக்காக நான்காவது வீரராக அறிமுகமானவர் தான் தினேஷ் கார்த்திக் (டிகே). இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடியவர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2006 டிசம்பர் 01-ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டி அது. அதில் 28 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார் டிகே. அந்தப் போட்டி நடந்து முடிந்து சுமார் 15 ஆண்டு காலம் கடந்துவிட்டது. இன்றும் இந்திய அணியில் அவர் விளையாடி வருகிறார். அவருடன் அந்தப் போட்டியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.