பயிற்சி ராணுவ அதிகாரிகளைத் தாக்கிய கும்பல்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் – ம.பி அதிர்ச்சி! | Trainee army officers attacked, woman friend raped in Madhya Pradesh

Share

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையமான `சோட்டி ஜாம்” என்ற இடத்திற்கு இரண்டு பயிற்சி ராணுவ அதிகாரிகள் தங்களது பெண் நண்பர்களுடன் சென்றனர். அவர்கள் ஜாம் கேட் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்களது முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி, கம்பு, கத்தி போன்றவற்றுடன் அங்கு வந்தது. அவர்கள் ராணுவ அதிகாரிகளையும், அவர்களுடன் வந்த பெண்களையும் தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்தனர். அதோடு விடாமல் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு, மற்றொரு ராணுவ அதிகாரியையும், ஒரு பெண்ணையும் அனுப்பி 10 லட்சம் ரூபாய் எடுத்து வருமாறு அனுப்பிவைத்தனர்.

அந்த அதிகாரியும், அவருடன் வந்த பெண்ணும் ராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். ராணுவ அதிகாரிகள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸாரும், ராணுவ அதிகாரிகளும் விரைந்தனர். பணம் வாங்கச் சென்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வராததால் அக்கும்பல் தாங்கள் பிடித்து வைத்திருந்த பெண்ணை அங்குள்ள காட்டிற்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. போலீஸாரும், ராணுவத்தினரும் வாகனங்களில் வருவதை பார்த்த கொள்ளை கும்பல், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றது.

பிணையக் கைதியாகப் பிடித்து வைத்திருந்த பெண்ணை அக்கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. போலீஸார் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களில் இரண்டு பேரை மட்டும் கைதுசெய்துள்ளனர். தப்பியோடிய எஞ்சியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தாக்குதலில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்குள்ளான ராணுவ அதிகாரிகள் இந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்து வந்தனர் என்றும், பெண் தோழிகளுடன் ஜாம் கேட் பகுதியை சுற்றிப்பார்க்க சென்ற போது இச்சம்பவம் நடந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com