சமூக வலைதள பக்கத்தில் ‘டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாற்றை எடுத்துக்கொண்டால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 68,000-லிருந்து, 2,00,000 வரை அதிகரித்து விரைவில் நோயாளிகள் குணமாகிவிடுவார்கள்’ என்ற தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம்.
“பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உடையது என்பது உண்மைதான். ஆனால், நம் உடலில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிகிச்சை பெற்றுக்கொள்ளும்போது மருத்துவரின் பரிந்துரைப்படி இந்தத் திரவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பிளேட்லெட்டுகள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் சித்த மருத்துவர் அல்லது அலோபதி மருத்துவரின் ஆலோசனை பெற்று அவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது நல்லது. கிராமப்புற பகுதிகளில் பலரும் இதனை மட்டுமே நம்பி எடுத்துக்கொண்டு, நோய் தீவிரமான பிறகும்கூட முறையான சிகிச்சை எடுக்காமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அது மிகவும் ஆபத்தானது. நோயின் தீவிர நிலையில் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.
பப்பாளி இலைச்சாறை 10 மில்லி அளவு எடுத்துக்கொண்டால் போதுமானது. இதில் கசப்புத்தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு குமட்டாமல் இருப்பதற்கு பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி இலைச்சாறு போல் ஆடாதொடா கஷாயம், ஆடாதொடா மணப்பாகு போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.
-ஜே.பி.ரேகாஸ்ரீ