கோலார்: எம்பி பதவி பறிபோக காரணமாக அமைந்த கோலாரில் மீண்டும் தனது பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார். மக்களவைக்கு கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தல் நடந்தபோது, கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கே.எச்.முனியப்பாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி பங்கேற்று வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தலைமறைவாகி இருக்கும் லலித்மோடி, நீரவ்மோடி ஆகியோரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையடுத்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டாண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு காரணமாக ராகுல் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தனது எம்பி பதவி பறிபோக காரணமான கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஏப்.5ம் தேதி ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்குகிறார். ராகுல்காந்தி ர கூட்டத்திற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை கோலார் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கோலார் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.