வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இந்த வாரம் பொதுத் தேர்வு எழுதப்போகும் என் மகனுக்கு, சென்றவார இறுதியில் தலைவலியுடன் கூடிய ஜுரம் ஆரம்பித்தது. படிக்க முடியாமல் குளிருகிறது என படுக்கையில் சுருங்கி படுத்துக்கொண்டான். அவசரமாக அவனை எழுப்பி ஒரு டோலோ 650 கொடுத்து மாலை வரை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் மாலையிலும் ஜுரம் விடாமல் அதிகரிக்கவே, வீட்டின் அருகில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் இவனை பரிசோதித்து விட்டு இது வைரல் ஃபீவர் தான். இரண்டு மூணு நாள் நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும். சரியா போயிரும் என்று கூறி சில மாத்திரைகளை எழுதித் தந்தார்.
அடுத்தவாரம் எக்ஸாம் வைத்துக் கொண்டு இந்தக் குழந்தைக்கு (வயது 17) ஏன் இந்த நிலைமை என்று என் தாயுள்ளம் பதறியது.
அடுத்த நாளில் 102 ல் இருந்து 101 ஆகக் குறைந்தது..தலைவலி விடவில்லை. மாத்திரைகளை வேளா வேளைக்கு கொடுத்தபடியே, நான் மட்டும் சென்று மீண்டும் அந்த மருத்துவரைப் பார்த்தேன்.
என் கண்ணில் தெரிந்த பீதியைப் பார்த்த அவர், பயப்படாதீங்க.. நாளைக்கு சரியா போகலன்னா,, நீங்க வேணா அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று ப்ளட் டெஸ்ட்க்கு கொடுத்துடுங்க என அறிவுரை கூறினார். அவர் எங்கள் குடியிருப்பில் இருக்கும் மருத்துவர். தனியாக மருத்துவமனை என வைத்துக் கொள்ளவில்லை. சரி என்று மறுநாள் வரை பொறுத்திருந்தேன்..