நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்மாவுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உசேன் இயற்கை மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உசேனின் மனைவி அஸ்மாவிற்கு கடந்த 6-ம் தேதி பிரசவவலி ஏற்பட்டுள்ளதாம். மருத்துவமனைக்கு தன் மனைவியை அழைத்துச் செல்லாமல், உசேன் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளாராம். ஆனால், அவர் பார்த்த பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை, இறந்து வெளியே வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க, இரவோடு இரவாக குழந்தையின் சடலத்தை புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் பரவ மேலப்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.