- ச.ஆனந்தப்பிரியா
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், PRO IMAGES
அருண்ராஜா காமராஜ் உடன் உதயநிதி
சட்டமன்ற உறுப்பினர், நடிகர் என இரண்டு தளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த வாரம் 20ம் தேதி ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் இந்தியில் வெளியாகி பல விவாதங்களை ஏற்படுத்தியது.
தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’யாக தமிழில் வெளியாகிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படப்பிடிப்புக்காக சேலத்தில் இருந்தவர் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில் இருந்து.
இந்தி திரைப்படமான ‘ஆர்ட்டிகிள் 15’ ரீமேக் தான் ‘நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுக்க காரணம் என்ன?
பதில்: ‘ஆர்ட்டிகிள் 15’ இந்தியில் வெளியான போதே பெரும் பேசுபொருளாக இருந்தது. மேலும் தேசிய விருது பெற்ற வெற்றி படமாகவும் அமைந்தது. படம் வெளியான சமயத்தில் நான் பார்த்தது தான். இரண்டு மூன்று வருடங்கள் ஆகி இருக்கும். அதற்கு பிறகு, போனி கபூர் என்னை சந்திக்க வேண்டும் என கேட்டிருந்ததாக சொன்னார்கள். நான் அவரை சந்தித்த போது, மூன்று படங்களுக்கான உரிமம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். அதில் ஒரு காமெடி படமும் இருந்தது. அவரிடம் நான், ‘மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க விருப்பமில்லை சார். ‘ஆர்ட்டிகிள் 15′ வெளியான சமயத்தில் விவாதத்தை ஏற்படுத்திய ஒன்று. அதை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சொல்கிறேன்’ என சொன்னேன். படம் பார்த்துவிட்டு அவரிடம், ‘இந்த படம் செய்யலாம். ஆனால், சரியான இயக்குநரிடம் தான் இதை செய்ய முடியும். ரீமேக் படத்தை நம் சூழலுக்கு ஏற்றாற் போல சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என இயக்குநருக்காக இரண்டு மூன்று மாதங்கள் காத்திருந்தோம்.
‘அந்த படம் பிரச்னைக்குரியது. அதை ஏன் செய்ய வேண்டும்?’ என நிறைய இயக்குநர்கள் பயந்தார்கள். அப்படி இருக்கும் போது தான் ‘கனா’ திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தேன். அருண் ஏற்கெனவே என் படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். ஆனால், இயக்குவார் என எதிர்பார்க்கவில்லை.
‘கனா’ பார்த்து விட்டு அருணை அழைத்து, ‘ஆர்ட்டிகிள்15′ படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறோம். நீங்கள் இதை இயக்க ஆர்வமாக உள்ளீர்களா?’ என்று கேட்டோம். அவரும் என்னைப் போலவே இரண்டு நாட்கள் நேரம் கேட்டு நிறைய பேசி விவாதித்த பிறகு படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.
அப்போது மகிழ்திருமேனி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். மேலும் தேர்தலும் அறிவித்தார்கள். அதனால் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் ஆரம்பிக்க நிறைய நேரம் இருந்தது. அதனால் படத்தை சரியாக எடுக்க வேண்டும் என நிறைய பத்திரிகையாளர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் என பலரை சந்தித்தோம்.
‘ஆர்ட்டிக்கிள் 15’ படம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம். ஆனால், தமிழ்நாட்டில் அதுபோல கிடையாது. அதனால் அதே கதையை நமக்கு ஏற்றாற்போல கற்பனை கதையாக மாற்றி இருக்கிறோம். இந்த படம் ஏன் செய்யவேண்டும் என்பதை உணர்ந்தே நாங்கள் இதை செய்திருக்கிறோம்.
இதற்கு முன்பு நீங்கள் நிறைய ஜாலியான கதைகள் கொண்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது இது போன்ற ஒரு சீரியஸான கதையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
பதில்: ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் வெற்றி தான் அதற்கு காரணம். படத்தில் கதாநாயகன், கதாநாயகனுக்கு நண்பனாக ஒரு காமெடியன், படத்தில் நான்கு பாட்டு இப்படி கமர்ஷியலாக இருந்தாலே படம் வெற்றியடைய போதுமான காரணமாக இருக்கும் என நினைத்தேன். அதுதான் என்னுடைய comfort zone ஆக இருந்தது. அதுவே ஒரு கட்டத்தில் சலித்து விட்டது. பிறகு ‘மனிதன்’ படத்துடைய வெற்றி, வரவேற்பு, மரியாதை என அந்த படத்தை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அனைவரும் சொல்வார்கள்.
அதற்கு பின்பு இருந்து, ஒரு படத்தின் கதை கேட்கும் போது அதில் நான் என்ன செய்யப் போகிறேன், எனக்கு என்ன சவாலாக இருக்கப் போகிறது என்ற விஷயங்களை கவனத்தில் கொள்வேன். ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் எனக்கு ஒரு காவல்துறை அதிகாரி வேடம். இதற்கு முன்பு ‘நண்பேன்டா’ படத்தில் மட்டும் ஒரு இரண்டு நிமிடங்கள் காவல்துறை அதிகாரியாக வரும் ஜாலியான கதாபாத்திரம். ஆனால், இதில் படம் முழுக்க சீரியசாக இருக்கும்படியான ஒரு அதிகாரியின் வேடம். அதனால் எனக்கு சிறிது பயம் இருந்தது. மேலும் அந்த சமயத்தில் எனக்கு இந்த கதாபாத்திரத்திற்காக தயாராக போதிய நேரம் கிடைக்கவில்லை. அப்போது தான் தேர்தல் பிரசாரமும் ஆரம்பித்திருந்தது.
ஜிம் சென்று அதற்கேற்றார்போல் உடலை பராமரிக்க முடியவில்லை. அதனால் என்னுடைய ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக் கலைஞர் என அனைவரும் சேர்ந்து அதற்கேற்றார் போல உடை, ஒப்பனையுடன் என்னை தயார் செய்தார்கள்.
நீங்கள் ஏற்கெனவே ‘நிமிர்’ என்ற படத்தை ரீமேக் செய்து இருப்பீர்கள். ஆனால் கதைக்களம் நன்றாக இருந்தபோதும் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லையே?
பதில்: இங்கு சினிமாவில் வெற்றிக்கு என எந்த ஒரு ஃபார்முலாவும் கிடையாது. அதுபோல ஏதேனும் ஒன்று இருந்தால் அதையே எல்லோரும் பின்பற்றினால் எல்லா படங்களும் வெற்றிப் படமாகி விடுமே. எல்லா படங்களுக்கும் எல்லோரும் உண்மையான உழைப்பை தான் கொடுப்பார்கள். ‘நிமிர்’ படத்தை பொருத்தவரை ஒரிஜினலில் அது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற எனக்கு மிகவும் பிடித்த படம். அவருடைய இயக்கத்தில் நான் நடிப்பதை மிகப்பெரிய வாய்ப்பாக நினைத்து தான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், எந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதை பார்வையாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த படத்திற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளீர்கள். எந்த வகையில் இந்த தலைப்பு படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தீர்கள்?
பதில்: சமூகநீதி பேசக்கூடிய படம் இது. இந்த தலைப்பை சொன்னவர் அருண். சொன்னதும், ‘இது மிக முக்கியமான தலைப்பு. தலைவருடைய சுயசரிதையின் தலைப்பு. அதை ஒரு சினிமா படத்திற்கு வைக்கிறோம். என் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் ஒருமுறை கலந்துவிட்டு பிறகு முடிவு சொல்கிறேன்’ என்று சொன்னேன். வீட்டில் அப்பா மற்றும் பெரியவர்களிடம் சொன்னதும் அவர்களும் யோசித்துவிட்டு ‘சரியாக செய்யுங்கள்’ என்று சொன்னார்கள். அதற்கு ஏற்றபடி நாங்களும் அந்த தலைப்புக்கு மரியாதை செய்துள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.
‘ஆர்ட்டிகிள் 15’ படத்தைப் பொருத்தவரை அது வெளியான போது அதன் மையக் கரு, வசனங்களும் இந்தியா முழுவதுமே சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு சூழலில் அது போன்ற சர்ச்சையை எதிர்பார்த்து வசனங்களில் கவனம் செலுத்தினீர்களா, இல்லை எப்படி அதை கையாண்டீர்கள்?
பதில்: இல்லை, என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் வசனங்களை நிறையவே இந்தியில் இருந்தும் சற்று மாற்றி வைத்தோம். உத்தர பிரதேசத்தில் இருக்கக்கூடிய சூழல் வேறு. தமிழ்நாட்டில் வட இந்தியாவை விட 40 வருடங்களாவது முன்னேறி உள்ளோம். ஆனாலும் இங்கும் ஒரு 40 கிராமங்களில் ஆவது தீண்டாமை இருக்கிறது. இதெல்லாம் கேட்கும் போது இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதனை படத்தில் சொல்லலாம். எதற்கு பயப்பட வேண்டும் என்றுதான் நிறைய வசனங்களை வைத்தோம். ஆனாலும் அதில் நிறைய வசனங்கள், காட்சிகள் சென்சாரில் நீக்கப்பட்டு விட்டன.
அதற்கு காரணமாக அங்கு என்னை கைக்காட்டி இருக்கிறார்கள். அவர் இது போன்ற படங்களில் நடித்தால் பிரச்னை வந்து விடும் என்று சொல்லி என் மேல் பழியை போட்டு இரண்டு மூன்று காட்சிகளை நீக்கி இருக்கிறார்கள். இருந்தாலும், படம் நன்றாகவே வந்திருக்கிறது.
ஆனால், நீங்கள் ஆளும் கட்சியில் இருக்கும் போது இது போன்ற படங்களில் நடித்தால் ஒரு விதமான பிம்பம் ஏற்படுமே! அப்படி இருக்கும்போது ஏன் அந்த ரிஸ்க்கை எடுத்தீர்கள்?
பதில்: நான் ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு மாதிரியான படம், எதிர்கட்சியில் இருக்கும்போது ஒரு மாதிரியான படம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு நடிப்பதில்லை.
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது போன்ற பல சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதே சமயத்தில் இந்த சமூக நீதியையும் நாம் பேச வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதற்கு இந்த மாதிரியான படங்கள் அதிகம் வர வேண்டும். நான் முன்பே சொன்னது போல மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 40 ஆண்டுகள் முன்னோக்கி இருக்க காரணம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர். அதனால் நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
மேலும் இந்த படத்தில் குறிப்பிட்ட அரசையோ அரசியல் கட்சியையோ குறை சொல்லி பேசுவில்லை. எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். படத்தில் கூட நடிகர் மயில்சாமி ஒரு இடத்தில் ஒரு வசனம் பேசுவார். ஒருவன் நல்லவன் என்பதும் கெட்டவன் என்பதும் சாதி கொடுத்தது கிடையாது, அவனுடைய மனதை பொருத்தது என்று சொல்வார். இந்த விஷயத்தை தான் படம் முழுக்க பேசுகிறது.
இந்த படம் சமூகநீதி பேசக்கூடிய கதை என்று சொன்னீர்கள். இது உங்களது வருங்கால அரசியலுக்கு உதவும் என்ற எண்ணம் இருந்ததா?
பதில்: நிச்சயம் இல்லை! அப்படி எல்லாம் கணக்குப் போடக் கூடிய ஆள் நான் கிடையாது. நல்ல படங்கள் செய்ய வேண்டும் அடுத்தடுத்து வரக்கூடிய கதாபாத்திரங்கள் சவாலானதாக இருக்க வேண்டும், என்னுடைய வழக்கமான வட்டத்தில் இருந்து தாண்டி படங்கள் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும். அப்படி தேர்வு செய்த படம்தான் இது அதுவும் நானாக போகவில்லை இந்த படமே என்னிடம் வந்தது.
‘நெஞ்சுக்கு நீதி‘ படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்கிறீர்கள். மாரி செல்வராஜ் எப்படிப்பட்ட படங்களை இயக்குவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியலுக்கு வந்த பிறகு ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாமன்னன்’ என நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் மீது ஒரு கவனம் வந்துள்ளதாக நினைக்கிறீர்களா?
பதில்: அரசியலுக்குள் வந்து மூன்று நான்கு வருடங்கள் ஆகி விட்டன. நிறைய படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன். மகிழ்திருமேனி படம் முடித்து விட்டேன். அதற்கு டப்பிங் மட்டும் பாக்கி உள்ளது. அடுத்த வெளியீடாக அது தயாராக இருக்கிறது. இன்னொரு படம் க்ரைம் த்ரில்லரான ‘கண்ணை நம்பாதே’ படம் இருக்கிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம் எடுத்த மாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் அது. மாரிசெல்வராஜ் எப்படி படம் இயக்குவார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்களோ அதேபோல் இந்த படமும் இருக்கும்.
சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறீர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எப்படி இரண்டையும் சமாளிக்கிறீர்கள்?
பதில்: கஷ்டம் தான். கொரோனா சமயத்தில் இடையில் எதுவும் படப்பிடிப்பு இல்லை. அதனால் முழுக்க தொகுதியில் இருந்தேன். இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் நான் முன்பே ஒப்புக்கொண்டது. அதனால் அதை முடித்துக் கொடுக்க வேண்டும். அரசியலில் இன்னும் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எனக்கு இன்று ஒரு அணி அமைத்து விட்டேன். அதற்கு பொதுவாக ஒரு வாட்ஸ்அப் நம்பர் உள்ளது. மக்கள் எதிர் குறைகளைச் சொல்லலாம். மேலும் தொகுதிக்கும் அடிக்கடி சென்று வருகிறேன். உதய் ஆப் என எனது பெயரில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
பட மூலாதாரம், AFP
அதை என்னுடைய அணி பார்த்துக்கொள்வார்கள். இப்படி நான் எங்கு இருந்தாலும் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறேன்.
தொடர்ந்து திரைத்துறையில் இயங்க திட்டம் இருக்கிறதா?
பதில்: முன்பே சொன்னதுபோல முடித்துக் கொடுக்க வேண்டிய படங்கள் கைவசம் இருக்கிறது. ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு நடிப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால், கதைகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அதே சமயம், அரசியலில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
உங்களுடைய தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆரம்பத்தில் நிறைய படங்களை தயாரித்து வெளியிட்டு கொண்டிருந்தது. ஆனால், இப்பொழுது வருகிற எல்லா முக்கிய படங்களையும் ‘ரெட் ஜெயண்ட்’தான் விநியோகஸ்தம் செய்து வருகிறது. இது குறித்து பரவலாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கவனிக்கிறீர்களா?
பதில்: என்ன செய்தாலும் விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே கிடையாது. என்னுடைய பேனரில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களே வெளியாகாமல் இருந்தது. திரையரங்குகள் திறந்த பிறகு வரிசையாக படங்கள் வருவதால் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். இன்னொரு விஷயம் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படங்களை நாங்கள் தான் வெளியிட வேண்டும் என்பதே எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ‘பேட்ட’ படத்தில் ஆரம்பித்த ஒப்பந்தம் அது.
படத்தை விநியோகம் செய்யுமாறு மற்றவர்கள் கூறி நாங்கள் நிராகரித்த படங்கள் அத்தனை இருக்கின்றன.
கடைசியாக ஒரு கேள்வி, நீங்கள் விரைவில் அமைச்சராக போகிறீர்கள் என்று சொல்கிறார்களே?
பதில்: அது குறித்து நானும் தலைவரோ எங்கும் பேசவில்லை. போன வருடம் நாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து நான் அமைச்சராக போகிறேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எது எப்போது நடக்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்வார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: