நூல் விலை உயர்வால் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி இயங்காததால் அன்னிய செலாவணி பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Share

சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சியில் ஓராண்டு காலம் ஆகியும், எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளது. டிஜிபி, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த ஆபரேஷன் 2.0 என அறிவிக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

கொள்கை விளக்க குறிப்பில், கஞ்சா தொடர்பாக, 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 148 பேர் கைது செய்யப்பட்தாக தெரிவித்தனர். ஆன் லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என ஓபிஎஸ், நான் அறிக்கை விட்டோம். திமுக அரசு, உயர் நீதிமன்றம் சொன்னதுபோல், தனி சட்ட திருத்தம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி குறித்து, சில நடிகர்கள் செய்யும் விளம்பரத்தை பார்த்து ஏமாற வேண்டாம். அதிக பணம் கிடைக்க சூழ்ச்சி செய்வார்கள், பின்னர், உங்களின் பணம் பறிப்போகும் என்றும், குடும்பமே சீரழித்து விடும் எனவும் தமிழக டிஜிபி தெரிவிக்கிறார். நூல் விலை உயர்வால் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி இயங்கவில்லை. அன்னிய செலாவணி பாதிக்கப்பட்டுள்ளது.

* ஏழுமலையா, அண்ணாமலையா? குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி கூறும்போது, அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி, பாஜ தேசிய தலைவர் நட்டா, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தமிழக பாஜ தலைவர் பெயரை குறிப்பிடும்போது, பாஜ மாநில தலைவர் ஏழுமலை… என்று கூறி விட்டார். இதனால் குழப்பம் அடைந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஏழுமலை இல்லை அண்ணாமலை என்றார். உடனே எடப்பாடி சுதாரித்துக் கொண்டு, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை என்று திருத்தி குறிப்பிட்டார். இதனால் அங்கு கூடி இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிரித்துவிட்டனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்றார். தற்போது அண்ணாமலைக்கு பதில் ஏழுமலை என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com