நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள காந்தள் பகுதியில் ஊட்டி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இங்கு பயின்றுவருகின்றனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை யார் அதிக அளவில் விழுங்குவது என்ற போட்டி, 8-ம் வகுப்பு பயின்றுவரும் நான்கு மாணவிகளிடையே ஏற்பட்டிருக்கிறது. அதில், அந்த மாணவிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை விழுங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், நான்கு மாணவிகளும் மயக்கமடைந்திருக்கின்றனர். அதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஊட்டி ஜி-1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், “பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பிறகு வாரம் ஒரு முறை ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில்தான் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். அதிக மாத்திரை மாணவிகளுக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.