வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அந்தப் பஞ்ச தந்திர சாம்பார்( அஞ்சு காய் சாம்பாரைத் தான் சொன்னேன்) வழக்கப் படுத்த ஆரம்பித்ததும் ஐந்து இட்லி உண்பது மூன்றாகக் குறைந்து போனது!
அடுத்து சாம்பார் வதக்கு கறி வகைகள் போக கூட்டுகள் செய்வதிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது.. வீட்டில் இரண்டு தென்னைமரம் ஒரு மாமரம் இருந்தது. ஆனாலும் உணவில் தேங்காயை வெகுவாகக் குறைத்துப் பயன்படுத்த ஆரம்பித்தேன். அந்த முறைகள் பற்றியும் தொடர்ந்து சொல்கிறேன்.
கூட்டு வகைகள் செய்வதற்கும் காய்கறிகள் தவிர இன்னொரு நல்ல சாய்ஸ் கீரை…. அரைக் கீரை முளைக் கீரை தண்டுக் கீரை தவிர பருப்புக் கீரை சுக்கா கீரை டில் லீவ்ஸ் என்று அழைக்கப்படும் சோம்பு கீரை (சதகுப்பை எனப்படும் மருத்துவ குணமுள்ள விதை தருவது எனப் படித்திருக்கிறேன்) புளிச்ச கீரை சக்கரவர்த்திக் கீரை சண்டிக் கீரை பாலக் கீரை குத்துப் பசலை கொடிப் பசலைக் கீரை போன்ற பல விதக் கீரைகளைப் பயன்படுத்தியும் அவை அவற்றின் சுவைக்குத் தகுந்தவாறு ஸ்பைசி தால் சாம்பார் கூட்டு மசியல் என்று விதம் விதமாகவும் வேறு வேறு சுவையிலும் செய்து கொள்ளலாம்.
உதாரணத்துக்கு வழ வழப்பு இல்லாத முறமுறப்பான இளம் சாம்பல் பச்சைநிறமும் முனையில் பிங்க் கலர் கண் சிமிட்டுவதுமான சக்கரவர்த்திக் கீரையை நறுக்கி வதக்கி மோர்க் குழம்பு தயிர் பச்சடி கூட்டு எனச் செய்யலாம்.
அருமையாக இருக்கும். ஒரு துண்டை நட்டு வைத்தாலே சிகப்பு நிறக் கொடியில் பச்சை இலைகளுடன் சந்தோஷமாகப் படர்ந்து செல்லும் கொடிப் பசலைக் கீரையில் வழு வழுப்பு இருக்குமாதலால் முழு இலைகளாகக் கழுவித் துடைத்து சற்று வெளி ஈரம் போனதும் நறுக்கி சிறிது நெய்யில் சீரகம் தாளித்து வெங்காயம் வதக்கி பொடிசாக நறுக்கிய இலைகளைச் சேர்த்துப் பிரட்டி இளம் சூட்டில் பிள்ளைகளுக்கும் கொடுத்துப் பாருங்கள்.