“நீரஜ் சோப்ரா பிறந்த ஊரில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஹரியானா, விளையாட்டுக்கு பிரதான மையமாக மாறி வருகிறது. நமது வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விருதுகளை வென்று வருகிறார்கள். ஹரியானா – வீரர்களுக்கு அதிகமான பரிசு தொகை கொடுக்கிற மாநிலங்களில் ஒன்று” என பானிபட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை ஆலையைத் திறந்து வைத்து பேசும் போது ஹரியானா முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.
ஹரியானா அரசு ஒருங்கிணைக்கும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் 2021 (Khelo India) கோவிட் சூழலால் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்தப் போட்டிகள் வரும் ஜூன் 4 முதல் 13 வரை நடக்கும் என அந்த மேடையில் குறிப்பிட்டார்.
“ஹரியானாவில் தொடங்கப்பட்ட இந்தச் சர்க்கரை ஆலை உழவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பும் செலவு இதனால் குறையும். உழவர்களின் நலனை உறுதிசெய்வதே மாநிலத்தின் பிரதான கடமை. ஹரியானாதான் 14 தானியங்களுக்கு ஆதார கொள்முதல் விலை நிர்ணயித்துள்ள மாநிலம். அதே போல கரும்புக்கு நாட்டிலேயே அதிகபட்ச கொள்முதல் விலை தருகிற மாநிலமும் கூட” எனப் பேசியுள்ளார்.