துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி வீழ்த்தியது.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதியது. இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கியது.
இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங் ஆகியோர் இடம்பெற்றனர். நியூஸிலாந்து அணியில் சுசி பேட்ஸ், ஜார்ஜியா ப்ளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின், ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மேர், லியா தஹுஹு, ஈடன் கார்சன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஓபனிங்கில் இறங்கிய சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் இணைந்து நிதானமாக ஆடி 61 ரன்களை சேர்த்தனர். சுசி பேட்ஸ் ஸ்ரேயங்காவிடமும், ஜார்ஜியா ஸ்மிருதியிடமும் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
அடுத்து இறங்கிய கேப்டன் சோஃபி டெவின் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அமெலியா கெர் 13, ப்ரூக் ஹாலிடே 16, மேடி க்ரீன் 5 ரன்கள் என மொத்தம் 160 ரன்களை நியூசிலாந்து எடுத்தது. சோஃபி டெவின் அவுட் ஆகாமல் இருந்தார்.
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா இறங்கினர். ஆனால் தொடக்கத்திலேயே ஏமாற்றம் தரும் விதமாக 2 ரன்களில் அவுட் ஆனார் ஷஃபாலி. ஸ்மிருதி மந்தனா 12 ரன்களுடன் நடையை கட்டினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13, ரிச்சா கோஷ் 12, தீப்தி ஷர்மா 13 என அடுத்தடுத்து விக்கெட்கள் விழவே 19வது ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. எனவே 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.