தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் புகட்டுவது, ஈட்ஸ்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தி சினைப்பை, மார்பகப் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
ஒரு பெண்ணுக்குப் பெண் தன்மையைத் தருவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். பெண்ணுள் கரு முட்டையை முதிர்ச்சி அடைய வைத்து வெளியேற்றி மாதவிடாய் நிகழச்செய்வது, மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வருவது உள்ளிட்டவற்றில் ஈஸ்ட்ரோஜெனின் பங்கு முக்கியமானது.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவது மிக அரிதாக நிகழ்கிற ஒரு விஷயம். சினைப்பையில் புற்றுநோய் வந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகமாகச் சுரக்கும். கருத்தடை மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கும் இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. அதே நேரம் தாய்ப்பால் ஊட்டுவதால், ஈஸ்ட்ரோஜன் தொடர்புடைய பிரச்னையை தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும், தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுக்கான வாய்ப்பும் குறைகிறது.
தாய்ப்பால் ஊட்டுவது தாய்மார்களின் உரிமை. கடந்த 2021, அக்டோபர் 29-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், `தன் சிசுவிற்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான அனைத்து உரிமையும் பிரிக்க முடியாதபடி தாய்க்கு இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
சர்வதேச அளவிலான ஆய்வின்படி, இந்தியாவில் போதுமான அளவு தாய்ப்பால் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால், தவிர்க்க முடிகிற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் இறக்கின்றனர். குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்றவற்றால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 3.47 கோடி இறப்புகள் வயிற்றுப்போக்காலும், 42 லட்சம் இறப்புகள் நிமோனியாவாலும், 40,382 இறப்புகள் உடல்பருமனாலும் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தாய்மார்களின் மரணங்களில் 7000 இறப்புகள் மார்பகப் புற்றுநோயாலும், 1,700 இறப்புகள் கருப்பை புற்றுநோயாலும் மற்றும் 87,855 இறப்புகள் இரண்டாம் கட்ட நீரிழிவு (type 2 diabetes) நோயாலும் ஏற்படுகிறது.
இந்தியா, கிட்டத்தட்ட 875.84 கோடி ரூபாயை ஆரோக்கியத்திற்காக சுகாதாரத் துறையில் செலவிடுகிறது. இருப்பினும் தாய்ப்பால் ஊட்டலின் விகிதம் குறைவாகவே இருக்கிறது.
மகப்பேறு முடிந்தவுடன் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ஹார்மோன் சார்ந்த மாற்றங்கள் நடைபெறும். இது தாய்மார்களின் மாதவிடாயை தாமதப்படுத்தும்; ஈட்ஸ்ரோஜன் சுரப்பை கட்டுப்படுத்தி சினைப்பை, மார்பகப் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதில் தாய்ப்பால் பெரும்பங்காற்றுகிறது. ஆஸ்துமா, காது சார்ந்த பிரச்னைகள் போன்றவையும் போதிய தாய்ப்பால் இல்லாமையால் ஏற்படும். பிறந்தவுடன் சில சிசுக்கள் இறந்துவிடுவதற்கு (Sudden Death Syndrome) போதிய தாய்ப்பால் இல்லாமையும் காரணமாகிறது. தாய்ப்பால் ஊட்டாமல் இருப்பது தாய்க்கு அதிக ரத்த அழுத்தம், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழி வகுக்கும்.

பச்சிளம் குழந்தைக்கான அருமருந்தாகும் தாய்ப்பால், இயற்கையின் வல்லமை நிறைந்தது என்பதை தாய்மார்கள் உணர வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு உரிய காலம் வரை தாய்ப்பால் ஊட்டி, ஆரோக்கியமான குழந்தைக்கு அடித்தளமிட்டுக் கொடுக்க வேண்டும்.
(தாய்ப்பால் ஊட்டும் விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கடைப்பிடிக்கப்படும் தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை முன்னிட்டு, Breastfeeding Promotion Network Of India இணையதள தரவுகளின் உதவியோடு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது).