கரீபியன் பிரீமியர் லீக்கில் செம்ம பார்மில் இருக்கும் நிகோலஸ் பூரன் 3 நாட்களில் தொடர்ச்சியாக 2 சதங்கள் விளாசினார். டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரரான நிகோலஸ் பூரன் இந்த ஆண்டு கலக்கு கலக்கென்று கலக்கியுள்ளார்.
இந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் 11 இன்னிங்ஸ்களில் 506 ரன்களை விளாசினார். சராசரி 56 ரன்கள் என்பதோடு, ஸ்ட்ரைக் ரேட் 169.69. எட்டு நாடுகளின் பலதரப்பட்ட பந்து வீச்சுகளைப் புரட்டி எடுத்துள்ளார். சர்வதேச டி20யாக இருந்தாலும், பிரான்சைஸ் டி20யாக இருந்தாலும், நிகோலஸ் பூரன் ஒரு அசைக்க முடியாத அதிரடி வீரராகத் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
2024-ம் ஆண்டில் நிகோலஸ் பூரன் 67 டி20 போட்டிகளில் 2251 ரன்களை 45.02 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 160. ஒரு சதம் 15 அரைசதங்கள். 154 பவுண்டரிகளுடன் இந்த ஆண்டில் 165 சிக்சர்கள் என்பதுதான் நிகோலஸ் பூரனின் அற்புத ஆண்டாக ஆனதற்கு முக்கியக் காரணமாகும். ஒரு காலண்டர் ஆண்டில் அதற்குள்ளாகவே இத்தனை ரன்களை எடுத்த வீரர்கள் இல்லை.
கிறிஸ் கெய்ல்தான் நிறுத்த முடியாத அதிரடி மன்னனாக திகழ்ந்து வந்தார். 2015-ம் ஆண்டில் கிறிஸ் கெய்ல் 135 சிக்சர்களை விளாசியது யாராலும் உடைக்கப்பட முடியாத சாதனை என்றே கருதப்பட்டது. ஆனால் நிகோலஸ் பூரன் அதை 2024-ல் ஊதித்தள்ளி 165 சிக்சர்கள் என்ற புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார்.
ஓர் ஆண்டில் 2026 ரன்களை எடுத்து பாகிஸ்தானின் ரிஸ்வான் தான் அதிக டி20 ஓராண்டு ரன் சாதனையை வைத்திருந்தார். இப்போது நிகோலஸ் பூரன் அவரைப் பின்னுக்குத் தள்ளி விட்டார். ரிஸ்வான் கொஞ்சம் எச்சரிக்கையாக ஆடும் வீரர் என்று கூறலாம். ஆனால் நிகோலஸ் பூரன் அப்படியல்ல. டி20 பேட்டிங்கில் புதிய பிரதேசங்களைத் திறந்து காட்டியவர் நிகோலஸ் பூரன். இந்த ஆண்டில் அவர் எடுத்துள்ள 2251 ரன்களில் 71% பவுண்டரிகளிலேயே வந்தது என்றால், அவரது பேட்டிங் ஃபார்ம் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளலாம். சிக்ஸர்கள் மட்டுமே 165 என்றால் அதுவே ஆயிரம் ரன்கள் பக்கம் வந்து விடுகிறது.
ஆனால் கிறிஸ் கெய்லின் சாதனை என்னவெனில் 2012, 2013, 2015, 2016, 2017 என்று இத்தனை ஆண்டுகள் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய சாதனையை தன் வசம் வைத்துள்ளார் என்பதே. நிகோலஸ் பூரன் தற்போதைய டி20 பிராண்ட் ஹிட்டிங்கில் அனைத்து கால சிக்ஸ் ஹிட்டர்களில் 16வது நிலையிலிருந்து 4வது நிலைக்கு உயர்ந்திருக்கிறார். முன்னேறுகையில் ரோகித் சர்மா, கிளென் மேக்ஸ்வெல், ஜாஸ் பட்லர், மில்லர் போன்றோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்
. 2024 இதோடு முடிகிறதா? இல்லை மே.இ.தீவுகள் டிசம்பர் மாதத்திற்குள் இன்னும் 11 டி20 போட்டிகளில் ஆடியாக வேண்டும். எனவே பூரனுக்கு எண்டே கிடையாது. ஆகவே இந்த ஆண்டு பூரனுக்கு ‘annus mirabilis’ – அற்புத ஆண்டுதான்.