இந்த நிலையில், பண்ணை உரிமையாளர் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்ததால், பண்ணையில் 20 பன்றிகளை வைத்துவிட்டு மீதமுள்ள 600-க்கும் மேற்பட்ட பன்றிகளை தன்னுடைய உறவினரின் விவசாயத் தோட்டத்தில் மறைத்துவைத்திருப்பதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பண்ணைக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றனர். மேலும், கிராம மக்கள் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், புகார் தெரிவிப்பவர்களை பண்ணை உரிமையாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதிகாரிகளுடன் சென்று பன்றி பண்ணையில் ஆய்வு செய்தோம். அங்கு, 20 பன்றிகள் மட்டுமே இருந்தன. 20 பன்றிகளுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவியிருப்பதால், அவற்றை புதைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாது. பன்றிகள் மூலம் மற்ற பன்றிகளுக்கு மட்டுமே இந்தக் காய்ச்சல் பரவும். அதனால், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. பன்றிக்காய்ச்சல் பரவும் தன்மை தடுக்கப்பட்டிருப்பதால், மற்றப் பண்ணைகளுக்கோ, கால்நடைகளுக்கோ பரவ வாய்ப்பில்லை. அதனால், கால்நடை வளர்ப்போரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. 600-க்கும் மேற்பட்ட பன்றிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் வீடியோ குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் பார்த்த வரையில் 20 பன்றிகள் மட்டுமே இருந்தன. இருந்தாலும், அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.