உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மொபைல் வீடியோ கேம் விளையாடி வந்திருக்கிறார். மொபைல் கேம் மோகத்துக்கு அடிமையான அந்த சிறுவனை கடந்த ஜூன் 4-ம் தேதி அவருடைய தாய் அடிக்கடி போனில் கேம் விளையாடக் கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தன் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயைச் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் பொய் சொன்ன சிறுவன் அதன் பிறகு காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதிராகக் கொலைப் பிரிவு (302)-ல் வழக்கு பதிவு செய்து சிறார் கூர்நோக்குப் பள்ளிக்கு அவனை அனுப்பிவைத்தது. இந்த நிலையில், அந்த சிறுவன் குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் நீதிபதியிடம் அழைத்துச் செல்லப்பட்ட போது, “நான்தான் என் தாயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன். அதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனத் தனது செயலுக்கு எந்த வருத்தமும் இல்லாமல் கூறியதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி அவனை சிறார் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.