சென்னை: நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்பவர்களுக்குத்தான் எதிரிகள். கடந்த 18 மாதத்தில் மட்டும் ரூ.3,657 கோடி மதிப்பிலான 3,150 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு/ இவை அனைத்தும் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை உயர்த்தி சொல்கின்றன.
இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது. இதற்கு காரணம், சமூக வளர்ச்சி திட்டங்களின் மூலமாக அனைத்து பிரிவு மக்களும் வளர்ந்ததுதான். ‘‘கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது” என்று எழுதியது. இதையே பிபிசி நிறுவனமும், இந்து ஆங்கில நாளிதழும் எழுதி இருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக உயர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மாநில அரசுகளின் வரி உரிமைகள், நிதி உரிமைகள் பலவும் ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டன. நிதிக்காக ஒன்றிய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை கடந்த 8 ஆண்டுகளில் மேலும் அதிகமாகிவிட்டது. அனைத்து நிதிகளையும் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. கட்டணம் உயர்த்தினால்தான் சலுகைகள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இப்படிப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையை தந்துவிடக் கூடாது என்று பெரும்பாலான சுமையை அரசே தாங்கிக் கொண்டு, சிறிய அளவிலான கட்டண சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அந்த நடவடிக்கைகள் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிதி ஆதாரத்தை திரட்டுவதுதான் எங்கள் முன்னால் உள்ள மிக முக்கியமான, பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் நான் மனம் திறந்து ஒப்புக்கொள்கிறேன்.
இத்தகைய சூழலிலும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் நலன் காப்பதில் திமுக அரசு எந்தளவிற்கு கண்ணும் கருத்துமாகச் செயல்படும் என்பதை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள். அரசு நலத் திட்டங்களையும், பல்வேறு சேவைகளையும் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும்விதமாக 10 ஆயிரத்து 338 புதிய பணியிடங்கள் பல்வேறு துறைகளில் அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கோவிட் நோய்த்தொற்றால் பணியிடை மரணம் அடைந்த 409 முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.98 கோடியே 45 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை இந்த அரசு 1-7-2021 முதல் செயல்படுத்தியிருக்கிறது.
நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள், நாத்திகர்கள் என்று சொல்லி, கோயில்களை சரிவர பராமரிக்கவில்லை என்று ஒரு கூட்டம் வீண் வதந்திகளை செய்திகளாக பரப்பி கொண்டிருக்கிறது. நான் பல முறை இதற்கு பதில் சொல்லி இருக்கிறேன். நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர; மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, நம்பிக்கையாளர்களுக்கு எதிரிகள் அல்ல. அற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலம்/ கட்டிடம்/மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 7-5-2021 முதல் 31-10-2022 வரையிலான காலத்தில் 3,150 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சுமார் ரூ.3,657 கோடியே 48 லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தர்கள் இதை போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போலியான கபடவேடதாரிகள் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பொறுத்துக்கொள்ள இயலாமல் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சாதனைகள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அனைத்து கோயில்களும் புத்தொளி பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் அவதூறு செய்துகொண்டிருக்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு குறித்து இம்மாமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது. மதக் கலவரங்கள் நடந்துள்ளதா? சாதி கலவரங்கள் நடந்துள்ளதா? சொல்லுங்கள். பொது மக்கள்மீது துப்பாக்கி சூடு நடதுள்ளதா? அப்பாவி உயிர்கள் பறிபோனதா? நெஞ்சை உலுக்கக்கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய கொடநாடு கொலைகளும், கொள்ளைகளும் யாருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்தன என்பதை மக்களும் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்காவது நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையா? சொல்லுங்கள்.
காவல் துறை அவர்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. அதை சொல்லாமல், நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றங்களை பேசுவதால் என்ன பயன்?
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டிட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசின் சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே, பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தேடி வந்து இங்கே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும். இவ்வாறு அவர் பேசினார்.