மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் மேல் ஒரு வயதானப் பெண்மணி நடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. `தில்வாரா காட் பகுதியில் நர்மதை மேல் நடந்து செல்லும் பெண்’ என்ற தலைப்புடன் வைரலான அந்த வீடியோவைத் தொடர்ந்து, ஆற்றின் மேல் நடந்து சென்ற பெண்ணைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்தப் பகுதிக்கு விரையத் தொடங்கினர். நர்மதை ஆற்றிலிருந்து வெளிவந்ததால் அந்தப் பெண்ணை அனைவரும் `நர்மதை தாய்’ என அழைத்து, அவரிடம் ஆசிபெற்றனர்.
#जबलपुर में नर्मदा नदी के पानी पर चलती हुई वृद्ध महिला का वीडियो वायरल होने के बाद लोग वृद्ध महिला को नर्मदा देवी मानकर पूजने लगे और लोगों का दावा है कि पानी में होने के बावजूद महिला के कपड़े गीले नहीं होते है।#Jabalpur #viral #viralvideo #NarmadaRiver pic.twitter.com/zZJdyVFqlu
— TheuttarpradeshNews.com (@TheUPNews) April 10, 2023
வைரல் வீடியோ விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆற்றில் நடந்து சென்ற பெண், ஜோதி ரகுவன்ஷி என்பது தெரியவந்தது. விசாரணையில் காவல்துறையினரிடம் பேசிய அந்தப் பெண், “நான் நர்மதாபுரத்தில் வசிக்கிறேன். 10 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, வேண்டுதலுக்காக நர்மதை ஆற்றில் வலம் வருகிறேன். அவ்வப்போது இங்கு வரும் பெண்களுக்கு நாட்டு மருந்துகளை வழங்கி வருகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

பின்னர் அந்தப் பெண்மணி ஆற்றில் நடந்து சென்றது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், “நர்மதை ஆற்றின் நீர்மட்டம், மணல் திட்டுகளால் மாறுபடுகிறது. எனவே, ஆழம் குறைவாக இருக்கும் இடங்களில் ஜோதி ரகுவன்ஷி நடந்தும், ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் நீந்தியும் சென்றிருக்கிறார். ஆற்றில் ஆழமானப் பகுதிகளுக்கு அவர் செல்லவே இல்லை. தற்போது அவரை அவரின் குடும்பத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.