இதற்கும் அடுத்த நிலை, உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றின் வீரியத்தையோ தொற்றையோ அழிக்க முடியாமல் போய், ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாத நிலையில், இந்தத் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும்.
உதாரணமாக, சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கும். மேலும், இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கும் அடுத்த கட்டமாக நுரையீரலை பாதிக்கும். இதைதான் ARDS (Acute Respiratory Distress Syndrome) என்பார்கள். இப்படி கடுமையான தொற்று ஏற்பட்டு, பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்போது, நோயாளி நினைவை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது.
சுருக்கமாக, ஓர் உறுப்பு பாதிப்படைந்து மற்ற உறுப்புகளையும் பாதிப்பதுதான் செப்சிஸ் அல்லது செப்டிசீமியா என்று அழைக்கப்படுகிறது. இது, உயிருக்கு ஆபத்தானதும் கூட. இந்த செப்சிஸ் ஏற்படும்போது, ஏராளமான துணை மருந்துகளும் பிற சிகிச்சை முறைகளும் தேவைப்படும். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி என்னும் தெரபி செய்யப்படும். அப்போது, தற்காலிகமாக அவரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஏதேனும் தொற்று அவரை பாதித்தால், அவருக்கும் செப்சிஸ் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.