நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். 16ம் நம்பர் ரோடு, தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென திமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்கினர். தடுக்க வந்த போலீசாரையும் தாக்கினர். இதில் 13 பேரும் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அங்கு சீமானும் இருந்தார்.
அப்போது போலீசார் கேட்ட கேள்விக்கு சீமானும், கட்சி தொண்டர் ஒருவரும் செல்போனில் பேசி கொண்டு மாறி மாறி பதிலளித்தனர். இதனால், போலீசார் யாராவது ஒருவர் பதில் சொல்லுங்கள் என கூறினர். அப்போது, அருகில் இருந்த தொண்டரை சீமான், பட்டு..பட்டென என கையில் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி நேற்று காலை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை, சம்பத் நகர், அரசு மருத்துவமனை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால், போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி பிரசாரம் செய்த 40 பேரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.