பூச நட்சத்திரத்தின் மகத்துவம்
பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பிரகஸ்பதி. பிரகஸ்பதியைத் தேவர்களின் குரு எனப் போற்றுகின்றன புராணங்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவர் குருபகவான். எனவே முருகப்பெருமான் குருவாக அருளும் தலங்களில் பூச நட்சத்திரத்தன்று வழிபடுவது சிறப்பு.
தை மாதத்தில் பூசமும் பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில்தான் சிவபெருமான் திருநடனம் ஆடினார் என்கின்றன ஞான நூல்கள்.
தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால் திருவருட்பிரகாச வள்ளலார் ஸித்தி விளாகத்தில் அந்த நாளில்தான் ஜோதியில் கலந்தார் என்பர். அங்கு ஏழு திரையை விலக்கி ஜோதிக்காட்சி வடலூரில் காட்டப்பெரும் நன்னாளும் தைப்பூசமே. சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல. இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் – பங்குனி உத்திரம் – வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகின்றன.

பழநி முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடலாமா?
பழநியில் அருளும் தண்டாயுதபாணியைப் பற்றி பலவிதமான தவறான புரிதல்கள் கூட உண்டு. அவர் ஆண்டிக் கோலத்தில் அருள்பாலிப்பதால் அவரை வீட்டில் வைத்து வழிபட்டால் நாம் ஆண்டியாகிவிடுவோம் என்று சிலர் சொல்வார்கள். இது மிகவும் தவறு. முருகப்பெருமானுடைய 16 வடிவங்களில் மிகவும் விசேஷமான வடிவமாகச் சொல்லக்கூடிய ஸ்கந்தன் என்று சொல்லக்கூடிய பழநி தண்டாயுதபாணி திருவடிவம்.
பழநி முருகனுடைய தியான ஸ்லோகம்,
“கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம்
ஸ்கந்தம் புஜத்வயமனாமயமேகவக்த்ரம்
காத்யாயனீ ப்ரியசுதம் கடிபத்தவாமம்
கெளபீனதண்ட தரதக்ஷிணஹஸ்தமீடே.
இதன் கருத்து: கற்பக விருட்சம் எப்படிக் கேட்டதை எல்லாம் கொடுக்குமோ அதுபோல யார் இவனை வணங்குகிறார்களோ அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கற்பக விருட்சம் போல பழநி ஆண்டவன் விளங்குகிறானாம்.
அப்படிப்பட்ட முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடுவதன் மூலம் வேண்டும் வரம் கிடைக்கும். செல்வ வளம் சேரும். இதே திருக்கோலத்தில்தான் சுவாமி மலையிலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி. எனவே முருகப்பெருமானை ஞான குருவாக ஏற்றுத் தைப்பூச நாளில் வழிபாடு செய்ய வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.