பட மூலாதாரம், NTR ARTS
ஆறு ஆண்டுகள் கழித்து, தற்போது தேவரா படத்தில் தனியாக, சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தார்.
இதனால், இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா? இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
தேவரா படத்தின் கதை என்ன?
பட மூலாதாரம், NTR ARTS
ஆந்திரா, தமிழ்நாடு எல்லையில் உள்ள ரத்னகிரி என்னும் பகுதியில் உள்ள நான்கு கிராமங்கள் கூட்டாக `செங்கடல்’ என்று அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய செங்கடல் வீரர்களில் தேவராவும் ஒருவர்.
பின்னர், அதே செங்கடலைச் சேர்ந்த பைராவுடன் சேர்ந்து சட்டவிரோத பொருட்களைக் கடத்துவதற்கு உதவுகிறார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தேவரா சட்டவிரோத கடத்தல் வேலைகளை நிறுத்த விரும்புகிறார்.
இந்த விஷயத்தில் தேவராவும் பைராவும் பகைவர்கள் ஆகின்றனர். தேவரா திடீரெனக் காணாமல் போகிறார். அவர் எங்கே போனார், தந்தையின் லட்சியத்தை அவரது மகன் `வரா’ நிறைவேற்றுவாரா என்பதே கதை.
படம் எப்படி இருந்தது?
பெயரைப் போலவே, இது தேவரா என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படம். தேவரா என்ற வீரனின் கதை.
‘தேவரா’ நிறைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். ஆனால் இந்தக் கதாபாத்திரத்தின் தீவிரத்தை படக்குழு திரையில் சரியாகக் காட்டவில்லை.
இரண்டாம் பாதியில் வரும் தேவராவின் மகன் வராவின் கதாபாத்திரம் முதலில் தாக்கம் ஏற்படுத்தும் எனத் தோன்றினாலும், பலவீனமான திரைக்கதையால் அடுத்தடுத்த காட்சிகளில் அந்தக் கதாபாத்திரமும் வலிமை இழந்துவிட்டது.
இரட்டை வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பு எப்படி?
பட மூலாதாரம், NTR ARTS
ஜூனியர் என்.டி.ஆர் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அந்தந்த கதாபாத்திரங்களின் பலவீனமான சித்தரிப்பு காரணமாக அவரது `மேஜிக்’ இந்தப் படத்தில் தென்படவில்லை.
சைஃப் அலி கானின் கதாபாத்திரத்திற்கான டப்பிங் குரல் சிறப்பாக இல்லை. ஸ்ரீகாந்தின் நடிப்பு ஓரளவுக்கு சுமாராக இருந்தது. பிரகாஷ் ராஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்.
‘தேவரா’ தெலுங்கில் ஜான்வி கபூரின் முதல் படம். இந்தப் படத்தில் அவரது (தங்கம்மா) கதாபாத்திரம் மற்றும் நடிப்பு இரண்டுமே இயல்பாக இல்லை.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் இந்தப் படத்தின் முதுகெலும்பு. அனிருத்தின் இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.
ஆனால் பாடல்கள் படத்துடன் ஒன்றவில்லை. ஆயுத பூஜை பாடல் அந்தளவுக்குச் சிறப்பாக இல்லை. சுத்தமல்லி பாடல் படத்திற்குப் பிளஸாக அமையவில்லை.
கொரட்டாலா சிவாவின் இயக்கம் எப்படி?
பட மூலாதாரம், NTR ARTS
‘தேவரா’ படத்தில் சில காட்சிகளில் கொரட்டாலா சிவாவின் இயக்கத்தில் வெளியான ‘ஆச்சார்யா’ படத்தின் பாணி தென்படுகிறது.
பெரிய நட்சத்திரங்கள், மாஸ் காட்டும் பாணி ஆகியவற்றால் இந்தக் கதை ஹிட் ஆக வாய்ப்பு இருந்தது. ஆனால் இயக்குநர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தின் எந்தக் காட்சியும் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு இல்லை. கதையின் ஆன்மாவை படத்தில் காட்ட சிவா தவறிவிட்டார்.
படத்தின் நீளம் மூன்று மணிநேரம். முழு கதையும் ஏற்கெனவே தெரிந்து விடுகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால், கதையில் திருப்பங்கள் இருந்தால் பார்வையாளர்களுக்கு அலுப்பு வராது. ஆனால் தேவரா படத்தில் அப்படி எதுவும் இல்லை.
புதுமையான விஷயங்கள் எதுவும் இல்லாத இந்தப் படத்தின் நீளமும் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
படத்தின் பலம்
- ஒளிப்பதிவு
- பின்னணி இசை
- சில ஆக்ஷன் காட்சிகள்
- எழுத்து, கதை
- படத்தின் நீளம்
- படத்தில் தனித்துவம் என்று எதுவும் இல்லை
(குறிப்பு: இந்த விமர்சனத்தில் உள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து)