இதனால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ராமதாஸ், “என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையைப் பறித்தார். நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது. உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில்தான் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே தன்னை தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். அன்புமணி எந்த கோர்ட்டுக்குச் சென்றாலும் நான் ஜெயிப்பேன். ராமதாஸைத் தோற்கடிக்க யாராலும் முடியாது.

இனி என்னிடம் எதுவுமே இல்லை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டாய். ஆனால் வியர்வைச் சிந்தி, 46 ஆண்டுக்காலம் 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று என் மக்களைச் சந்தித்துப் பேசி நம் சமூகத்தின் நிலைமையைக் கூறி வளர்த்த எனது கட்சியை நீ முழுமையாகப் பறிக்க நினைக்கிறாய்.
அந்த உரிமையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. எனக்கு உதவியாக எனது மூத்த மகள் காந்தி செயல் தலைவராக நியமனம் செய்துள்ளேன். டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது உனது தலைவர் பதவி முடிந்து விட்டது. ஆனால் ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டாய்.