தேனி மாவட்டம், போடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் கணவன்-மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரன்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழம்கொண்ட மொட்டைக்கிணறு ஒன்று இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து சத்தம் வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட கிணற்றுப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள், கிணற்றைச் சுற்றி வளர்ந்திருந்த செடிகளைப் பொதுமக்கள் உதவியுடன் அகற்றி, கிணற்றில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ராமராஜ், அவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை மீட்டு, மேலே கொண்டு வந்தனர். மயங்கி நிலையிருந்த அனைவரையும், உடனடியாக போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி ராமராஜின் மகள்கள் ஈஷா (3), ஜீவிதா (2) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கணவன்-மனைவி, ஒரு குழந்தை என மூவர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர்.