டோக்கியோ ஒலிம்பிக்ஸ் முடிந்து ஏறக்குறைய முழுமையாக ஒரு ஆண்டு நிறைவடைய இருக்கிறது. அந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெரும்புகழைத் தேடித்தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்னும் ஓயவில்லை. அவர் வீசும் ஈட்டிகள் இன்னும் வேகமாக காற்றைக் கிழித்து பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. சாதனை மேல் சாதனை செய்து வருகிறார். நாளையும் ஒரு வரலாற்று சாதனையை செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவின் யூஜினில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உலகின் தலைசிறந்த தடகள வீரர், வீராங்கனைகள் அத்தனை பேரும் அங்கேதான் முகாமிட்டிருக்கின்றனர். இந்தத் தொடரில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவும் ரோஹித் யாதவும் பங்கேற்றிருக்கின்றனர். தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு இருவருமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கின்றனர். இவர்கள் பங்கேற்கப்போகும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7:05 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இதற்கு முன் இந்தியா சார்பில் நீளம் தாண்டுதல் வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே பதக்கம் வென்றிருக்கிறார். 2003-ல் பாரிஸில் நடந்தத் தொடரில் அவர் வெண்கல பதக்கத்தை வென்று சாதித்திருந்தார். அதன்பிறகு, இந்தத் தொடரில் எந்த இந்தியருமே பதக்கம் வென்றதில்லை.
20 ஆண்டுகால பதக்க ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இப்போது இந்தியாவிற்குக் கிட்டியிருக்கிறது.

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் என இருவர் பங்கேற்றாலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு நீரஜ் சோப்ராவுக்கே அதிகமிருக்கிறது. இப்போதைய சூழலில் ரோஹித் யாதவால் பதக்கம் வெல்லும் அளவுக்கு மாபெரும் பெர்ஃபார்மென்ஸை கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. தகுதிச்சுற்றிலேயே ரோஹித் யாதவ் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறவில்லை. எட்ட வேண்டிய 83.50 மீட்டர் தூரத்திற்கு அவர் ஈட்டியை வீசவே இல்லை. 80.42 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வீசியிருந்தார். ஆயினும், டாப் 12 சிறந்த தரவரிசையின் அடிப்படையில் 11வது இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டார். அவருடைய தனிப்பட்ட சிறப்பான செயல்பாடே 82.54 மீட்டர்தான். ஆகையால், ரோஹித் யாதவ் பதக்கம் வெல்வதற்கான யதார்த்த வாய்ப்புகள் ரொம்பவே குறைவுதான்.
அதேநேரத்தில் நீரஜ் சோப்ரா நிச்சயமாக பதக்கம் வெல்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகுதிச்சுற்றில் 83.50 மீட்டர் தூரத்தை எட்டினாலே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று விடலாம் என்ற சூழல் 88.39 மீட்டருக்கு மிகச்சிறப்பாக ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்கு பிறகு நீரஜ் சோப்ரா சில மாதங்களை ஓய்வு மற்றும் பிரத்யேக பயிற்சிகளுக்காகச் செலவிட்டார். அவற்றையெல்லாம் முடித்துவிட்டு வந்தபோது இன்னும் மெருகேறி இன்னும் தீவிரமான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுக்க ஆரம்பித்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு நீரஜ் சோப்ரா ஆடியிருக்கும் Paavo Nurmi Games, Kuortane Games, Diamond League இந்த மூன்று தொடரிலுமே மிகச்சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

Kuortane Games இல் 86.69 மீட்டர் தூரத்திற்கு வீசி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். Paavo Nurmi இல் 89.30 மீட்டர் மற்றும் Diamond League-ல் 89.94 மீட்டர் வீசி வெள்ளிப்பதக்கங்களை வென்றிருந்தார்.
இதில் இரண்டு முறை அவர் வைத்திருந்த தேசிய ரெக்கார்டை அவரே வேறு உடைத்திருந்தார். Diamond League-ல் வீசிய 89.94 மீட்டர்தான் நீரஜின் கரியர் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸாக பதிவானது. வெறும் 6 சென்டி மீட்டரில் 90மீ இலக்கை தவறவிட்டிருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு ஆடியிருக்கும் இந்த மூன்று தொடர்களிலுமே பதக்கம் என்பதை தாண்டி நீரஜ் ரொம்பவே சீராகச் செயல்பட்டிருக்கிறார். இந்த மூன்று தொடர்களிலும் சேர்த்து மொத்தம் 15 முறை ஈட்டியை வீசியிருக்கிறார். அதில் 5 முறை Foul வாங்கியிருக்கிறார். முறையாக வீசப்பட்ட 10 வாய்ப்புகளில் 7 முறை 86 மீட்டருக்கும் மேல் வீசியிருக்கிறார். Diamond League இல் நீரஜ் வீசிய 6 வீச்சுகளும் முறையானதாக அமைந்திருந்தன. இந்த 6 வீச்சுகளில் 4 வீச்சுகளில் ஈட்டி 86 மீட்டர் தூரத்தைத் தாண்டியிருந்தன.
மூன்று தொடர்களிலும் சேர்த்து அவரின் குறைந்தபட்ச வீச்சு 84.37 மீ. அதற்கு கீழ் குறைந்ததே இல்லை. எல்லா வாய்ப்புகளிலும் 84 மீட்டருக்கு மேல்தான் வீசியிருக்கிறார்.

இந்த சீரும்சிறப்புமான பெர்ஃபார்மென்ஸ்களின் நீட்சியாகத்தான் நீரஜின் இந்தத் தகுதிச்சுற்று பெர்ஃபார்மென்ஸூம் அமைந்தது. 88.39 மீட்டருக்கு வீசியிருந்தார். க்ரனாடாவைச் சேர்ந்த பீட்டர்ஸ் ஆண்டர்சன் மட்டுமே நீரஜை விட அதிகமாக 89.91 மீட்டர் தூரத்திற்கு வீசியிருந்தார். ரொம்பவே சுலபமாக சௌகரியமாக நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்போடு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.
எனில், நீரஜ் சோப்ராவுக்கு பதக்கம் வெல்வதில் கடினமே இருக்காதா? நிச்சயமாக இல்லை. இறுதிப்போட்டியில் ஈட்டி வீசப்போகும் 12 பேரில் ஒரு சிலர் நீரஜ் சோப்ராவுக்குக் கடுமையாகப் போட்டியளிக்கக்கூடும். பீட்டர்ஸ் ஆண்டர்சன் நடப்பு சாம்பியன். 2019-ல் இதே உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 86.89 மீட்டருக்கு வீசி தங்கம் வென்றவர். இப்போது இந்த சீசனில் மட்டும் 3 முறை 90 மீட்டருக்கு மேல் வீசியிருக்கிறார். செக் குடியரசை சேர்ந்த யாக்கோப் வாட்லே, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ராவுக்கு அருகில் வெள்ளிப்பதக்கத்தோடு நின்றவர். 2017 உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் சிறப்பாக வீசி வெள்ளி வென்றிருக்கிறார். இந்த சீசனில் 90.88 மீட்டருக்கு ஒரு முறை வீசியிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நான்காம் இடம்பிடித்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியான் வீபர், 2019 சாம்பியன்ஷிப்பில் நான்காம் இடம்பிடித்த ஃபின்லாந்தைச் சேர்ந்த லாஸி எடல்டாலோ, அதே ஃபின்லாந்தைச் சேர்ந்த ஹெலண்டர், 2015 சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருக்கும் எகிப்தை சேர்ந்த இஹாப் அப்தெல்ரமான் போன்ற அனுபவமிக்க பல வீரர்களும் நீரஜூக்குப் போட்டியாக இருக்கக்கூடும்.

பதக்கமாகினும் ஒலிம்பிக்ஸை போன்றே தங்கப்பதக்கத்தை நீரஜ் வென்றால் அது இன்னும் பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில், இதற்கு முன் இரண்டே இரண்டு ஈட்டி எறிதல் வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக்ஸ் மற்றும் உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் ஒரே சமயத்தில் பதக்கம் வென்றிருக்கின்றனர்.
ஒருவர் நார்வேயை சேர்ந்த Andreas Thorkildsen. இன்னொருவர் Jan Zelenzy. தங்கம் வென்றால் இந்த வரிசையில் நீரஜ் சோப்ராவும் இணைவார்.
பீட்டர்ஸ், வால்டே, வீபர் போன்றோரும் தங்கத்திற்குக் கடுமையாக முயல்வர். அவர்களின் சவாலைத் தாண்டிதான் நீர்ஜ் வென்றாக வேண்டும்.
போட்டி எப்படி நடக்கும்?
இறுதிப்போட்டியில் ஒரு வீரருக்கு 6 வாய்ப்புகள் வழங்கப்படும். முதல் 3 வாய்ப்புகள் முடிந்தவுடன் கடைசி 4 இடத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். முதல் 8 இடத்தில் இருப்பவர்களுக்குதான் மீதமுள்ள 3 வாய்ப்புகளும் வழங்கப்படும். முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே தன்னுடைய பெஸ்ட்டை கொடுப்பதுதான் நீரஜூடைய சமீபத்திய வழக்கமாக இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸின் தகுதிச்சுற்றிலும் முதல் வாய்ப்பிலேயே இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தார். இறுதிப்போட்டியில் அவருக்குத் தங்கத்தை பெற்றுக்கொடுத்த 87.58 மீ வீச்சும் இரண்டாவது வாய்ப்பிலேயே வந்திருந்தது. அவரது கரியர் பெஸ்ட்டாக பதிவாகியிருக்கும் 89.94 மீட்டரும் கடந்த மாதத்தில் Diamond லீகில் முதல் வாய்ப்பிலேயே வந்திருந்தது. இங்கே சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் நீரஜ் வீசிய 88.39 மீட்டரும் முதல் வாய்ப்பிலேயே வந்ததுதான்.
ஆக, நாளை நடைபெறப்போகும் இறுதிப்போட்டியிலுமே நீரஜ் வீசப்போகும் அந்த முதல் இரண்டு வீச்சுகள் வரலாற்று சிறப்புமிக்கதாக மாறக்கூடலாம்.

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற தனிப்பட்ட இந்திய வீரராக 2021க்கு முன்பு வரை அபினவ் பிந்த்ரா மட்டுமே இருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் தங்கம் வென்றபோது “You have fulfilled a nation’s dream. Welcome to the Club. Extremely Proud!” என அபினவ் பிந்த்ரா வாழ்த்து கூறியிருந்தார். இதேபோன்ற வாழ்த்துச் செய்தியை நாளை காலை அஞ்சு பாபி ஜார்ஜிடமிருந்தும் எதிர்பார்க்கலாம்!
Do it Neeraj!