`தூதுவளை… நோய்களைப் போக்கும் தூதுவன்!’ – மூலிகை ரகசியம் – 7 | medicinal and health benefits of Solanum trilobatum

Share

தாவரங்களுள் மருந்தாகப் பயன்படும் செடி வகைகளையும் மர வகைகளையும் அதிகம் அறிந்து வைத்திருப்போம். கொடி வகைகளும் மருந்தாகப் பயன்படும் எனும் உண்மையை நீங்கள் அறிந்துகொள்வதற்கான மூலிகை நேரமிது! பற்றி ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து பற்றி ஏறும் கொடி வகையான தூதுவளையைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!

தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முள்களைப் பெற்றிருக்கும் தூதுவளை. முள்கள் இருப்பினும் தனது மருத்துவ குணங்களின் மூலம் பாசத்தை வெளிப்படுத்தும் அன்பான மூலிகை இது. அருகிலிருக்கும் வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு சரசரவென ஏறும் தன்மை கொண்டது. இந்தக் கொடி வகையான தூதுவளை, சுரம், இருமல், சளி போன்ற கப நோய்களைக் குணப்படுத்த, `சங்க கால தூதுவனைப்’ போல மகிழ்ச்சியுடன் தூது செல்லும் என்பது சிறப்புச் செய்தி.

சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு.

சமையலுக்குத் துணை:

ஒரே மூலிகைதான்! ஆனால், தூதுவளையை வைத்து விதவிதமாக உங்களுக்குப் பிடித்தமான ரெசிப்பிக்களைச் செய்து கொண்டாடலாம். `ஸ்வீட் எடு கொண்டாடு…’ போல `தூதுவளையை எடு கொண்டாடு…’ எனும் வாசகத்தை நினைவு வைத்துக்கொண்டால், வாழ்நாள் முழுக்க நோயில்லா கொண்டாட்டம்தான்! தூதுவளையின் இலைகளைக் கொண்டு சட்னி, துவையல், ரசம், அடை எனப் பலவித உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம்.

உணவாகப் பயன்படும் மூலிகைகளில் தூதுவளைக்கு என்றுமே முக்கிய இடமுண்டு. நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சுவதைப்போல, தூதுவளை இலைகளையும் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தினால், நெய்யின் மருத்துவக் குணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் கட்டுப்படுத்த `தூதுவளை நெய்’ எனும் ஸ்பெஷல் சித்த மருந்தும் நமது பாரம்பர்யத்தில் உண்டு.

ஆராய்ச்சியில் தூதுவளை:

புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்களில் தூதுவளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. காச நோயாளர்கள் உட்கொள்ளும் மருந்துகளோடு தூதுவளையையும் சேர்த்து பயன்படுத்தும்போது விரைவாக நோயின் தீவிரம் குறைகிறதாம்.

காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். அடுத்துவரும் மழை மற்றும் குளிர்காலத்தில் தூதுவளை தண்ணீரை முயன்று பாருங்கள்! இதன் இலைச் சாற்றோடு, சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்க சளி, இருமல் மட்டுமன்றி செரிமான உபாதைகளும் குணமாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com