உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய்க் கட்டியில் இருந்து பிரியும் செல்கள், ரத்த ஓட்டத்தின் மூலம் மற்றொரு பகுதிக்கும் பரவி, அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது மெடாஸ்டாட்டிக் புற்றுநோய் (Metastatic cancer) ஆகும்.
இதற்கு, Stage IV புற்றுநோய் என மற்றொரு பெயரும் உண்டு. உடலின் வேறு பகுதியில் தோன்றி இருந்தாலும் இந்த புற்றுநோய் செல்களின் தன்மை முதலில் எந்த உறுப்பில் ஏற்பட்டதோ அங்கிருக்கும் புற்றுநோய் செல்களின் தன்மையை ஒத்ததாகவே இருக்கும்.
உதாரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு அங்கு இருக்கும் செல்கள் உடலின் வேறு ஏதாவது உறுப்புக்கு ரத்த ஓட்டம் மூலம் பரவி புற்றுநோயை ஏற்படுத்தினாலும், அது மார்பகப் புற்றுநோய் எனக் கருதப்படுவதோடு அதற்கான சிகிச்சை முறைகளே கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டம் மூலம் பிற உறுப்புகளுக்கு நகரும் வழிமுறைக்கு பெயர் ‘மெடாஸ்டாஸிஸ்’ (Metastasis).