தன்னுடைய மார்பக அளவு தொடர்பான பெருமிதமோ, மன வருத்தமோ பெரும்பான்மை பெண்களிடம் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த உறுப்பில் சிறியதாக ஒரு பிரச்னையோ மாற்றமோ இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியை செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் சொல்லக் கேட்போமா..?
“மார்பக அளவு காரணமாக மட்டுமல்ல, மார்பக வடிவத்தில் ஏற்படும் வித்தியாசம் காரணமாகவும் பல பெண்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்பகம் சிறியதாக இருக்கிறது என்கிற பிரச்னையுடன் வருபவர்களுக்கு, `மார்பக அளவுக்கும் திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கவுன்சலிங் கொடுத்து அனுப்பிவிடுவேன். ஒரு மார்பகத்தைவிட இன்னொரு மார்பகம் சற்றுப் பெரிதாகவோ, சற்று சிறியதாகவோ இருக்கிறது என்று சிகிச்சைக்கு வருகிற பெண்களையும்கூட `வெளிப்படையாகத் தெரிகிற அளவுக்கு இல்லையென்றால் எந்தச் சிகிச்சையும் தேவையில்லை’ என்று கவுன்சலிங் கொடுத்து அனுப்பி விடுவேன். ஆனால், மார்பகங்களுக்கிடையேயான வித்தியாசம் பெரியளவில் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவது கடினம். அவர்களுக்குத் தேவை தீர்வு மட்டுமே…
அந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டு மார்பகங்களுக்கும் இடையிலிருந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. அதன் காரணமாகவே அவர் பல வருடங்களாக திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறார். `ஸ்கூல் டேஸ்ல லேசாதான் வித்தியாசம் தெரிஞ்சது டாக்டர். வளர வளர சரியா போயிடும்னு வீட்ல எல்லாரும் சொன்னாங்க. நானும் அதை நம்பிட்டு நிம்மதியா இருந்தேன். தவிர, யூனிஃபார்ம்ல துப்பட்டா போடுறதால இந்த வித்தியாசம் பெருசா யாருக்கும் தெரியலை. ஆனா, காலேஜ் போறப்போ மார்டர்னா துப்பட்டா இல்லாம டிரெஸ் போட ஆரம்பிச்சேன். கூடப் படிக்கிற கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சாங்க. அப்போதான், என்னோட பிரெஸ்ட் வித்தியாசம் ரொம்ப வெளிப்படையா தெரியுதுங்கிறது எனக்குப் புரிஞ்சது. அன்னிக்கு காலேஜ் பாத்ரூமுக்குள்ள போய் அழுதேன். அதுக்கப்புறம் ஷால் இல்லாம நான் டிரெஸ் பண்றதே இல்ல. இப்போ நான் வொர்க் பண்ணிட்டிருக்கேன். எப்பவாவது புடவை கட்டணும்னாலே பயமா இருக்கும். பிளவுஸ் தைக்கக் கொடுக்கிறப்போ பிரெஸ்ட் வித்தியாசம் டெய்லருக்கு தெரிஞ்சிடுமோன்னு பதற்றமா இருக்கும். இதுக்கு பயந்துகிட்டே கல்யாணத்தையும் தள்ளிப் போட்டுட்டே வர்றேன். எனக்கு ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்’ என்று கண்கலங்கினார்.
அவருக்குத் தேவை அறுவை சிகிச்சை. பெரிதாக இருக்கிற மார்பகத்தின் பகுதியில் சிறிய அளவில் கட் செய்து, சிறிதளவு கொழுப்புப்பகுதியை நீக்கித் தையலிட்டோம். இந்தப் பகுதியில் அறுவை செய்தால், வெளியே தெரியாது. பாலுறுப்புகள் தொடர்பான பிரச்னைகளுக்கும் தேவையான மருத்துவ தீர்வுகள் இருக்கின்றன. பிரச்னைகளை மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டே இருக்காமல், திருமணத்தைத் தள்ளிப்போடாமல், மருத்துவ உதவியை உடனடியாக நாடுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.